முன்னாள் பிரதியமைச்சர் மயோனை கைது செய்ய பிடியாணை உத்தரவு!
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி இலஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் உயர்கல்வித் துறைப் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவைக் கைது செய்ய வேண்டும் என்று கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தேடுவதற்காக விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முஹமட் முஸாமிலுக்கு 4.2 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் கொடுக்க முற்பட்டார் என்று மயோனுக்கு எதிராக இந்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று அழைக்கப்பட்டபோது மயோன் மன்றில் ஆஜராகவில்லை. இதை அடுத்து மயோனைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. முஸ்தபா தற்போது நாட்டில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.