47 வருடங்கள் பழைமை வாய்ந்த மருதமுனை தபால் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம் வேண்டும்!பொதுமக்கள் கோரிக்கை

அம்பாறை மாவட்டத்தின் சுமார் 47 வருடம் பழைமை வாய்ந்த மருதமுனை தபால் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம் அமைக்கப்படவேண்டுமென மருதமுனைப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 1963 ஆம் ஆண்டு மருதமுனைப் பிரதான வீதியில் வாடகைக் கட்டிடத்தில் ஓர் உப தபால் நிலையமாக இந்த தபால்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

இது 33ஆண்டுகளுக்குப் பின்னர் 1996.08.30ஆம் திகதி 2ஆம் தர தபால் நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. எனினும், இன்றுவரை வாடகைக் கட்டிடத்திலேயே இத்தபால் நிலையம் இயங்கி வருவது கவலைக்குரியதாகும். இந்தத் தபால் நிலையத்தின் கீழ் இரண்டு உபதபால் நிலையங்கள் உள்ளன. அவை பெரிய நீலாவணையிலும் அக்பர் கிராமத்திலும் இயங்கிவருகின்றன. 11 கிராம சேவையாளர் பிரிவுகளில் சுமார் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட இக்கிராமத்தில் 6 பாடசாலைகள், 14 பள்ளிவாசல்கள், 2 வங்கிகள், 15 இற்கு மேற்பட்ட விளையாட்டுக் கழகங்கள், ஒரு காதி நீதிமன்றம் ஆகியவை உட்பட நூற்றுக்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் பல சமூக சேவை அமைப்புக்களும் உள்ளன.

இந்த தபால் நிலையத்தில் தினமும் சராசரியாக 400 இற்கும் மேற்பட்ட கடிதங்கள் விநியோகிக்கப்படுகின்றன. 3 தபால் ஊழியர்கள் தேவைப்படும் இடத்தில் 2 தபால் ஊழியர்களே கடிதங்களை விநியோகிக்கின்றனர். இந்த நிலையில் நிரந்தர கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு அரச காணி இல்லையென்ற காரணத்தைச் சொல்லியே நீண்ட காலம் இழுத்தடிக்கப்பட்டு விட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் நோக்கோடு மருதமுனை மக்கள் மண்டபத்துக்கு அருகிலுள்ள மாநகர சபைக்குச் சொந்தமான காணித்துண் டொன்றை தபால் நிலையம் அமைப்பதற்கு கல்முனை மாநகரசபை ஒதுக்கித் தர முன்வந்துள்ளது.

நிரந்தரக் கட்டிடம் கட்டுவதற்கு தபால் திணைக்களம் நிதியொதுக்கியுள்ளது. எனினும், இக்கட்டடத்தைக் கட்டுவதில் தாமதம் ஏற்படுகின்றது. இதுவிடயம் தொடர்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள அரசியல் தலைமைகள் மற்றும் பொதுத்தாபனங்களின் பிரதிநிதிகள் உடனடியாகத் தலையிட்டு குறித்த இடத்தில் தபால் நிடிலையத்தைக் கட்டுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்