மட்டக்களப்பில் இன்று அதிகாலை வழிப்பறி கொள்ளை - பொலிஸார் தீவிர விசாரணை
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று (08) அதிகாலை ஆயுதங்களுடன் வந்த சிலர் வழிப்பறி கொள்ளைகளை மேற்கொண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.00 மணியளவில் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு ஆலையடி பகுதியில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இரண்டு பேர் ஆயுதங்களுடன் நின்று அதிகாலையில் வீதியினால் பயணித்தவர்களை வழிமறித்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், தொழிலுக்கு சென்றவர்கள் என பலரிடம் இவ்வாறு கொள்ளையிடப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.