வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய வேட்பு மனுக்களைஇன்று திங்கட்கிழமை (யூலை 29) தாக்கல் செய்யவுள்ளதாக உட்கட்சி தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் யாழ் மாவட்டத்திற்கான வேட்புமனுக்களை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்யவுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்துக்கான வேட்பு மனுவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், கிளிநொச்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுபவருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையிலான குழுவினர் தாக்கல் செய்யவுள்ளனர். அதுபோல மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.