இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு கடந்த 27 வருடகாலமாக செயல்பட்டுவந்த பிரதிநிதித்துவ அரசியல் முறைமையில் இருந்து இன்று தொடக்கம் முழுவதுமாக விலகிக் கொள்ளும் எனது தீர்க்கமான தீர்மானத்தை இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் இவ்வறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றம், மாகாணசபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் இனிவரும் காலத்தில் ஒரு வேட்பாளராக பங்குபற்றப் போவதில்லை என்றும், எந்தவொரு கட்சியின் தேசியப்பட்டியலிலோ, அல்லது எதிர்காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வரும் வேறு ஏதேனும் முறையிலோ பாராளுமன்றத்திற்கோ மாகாணசபைக்கோ மக்கள் பிரதிநிதியாக செல்லப்போவதில்லை என்பதையும் பகிரங்கமாக அறியத்தருகிறேன். 1981ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டுவரையான 13 வருடகாலம் ஈரோஸின் அங்கத்தவராக செயல்பட்டேன். 1994ஆம் ஆண்டு தொடக்கம் நிகழும் காலம்வரை 22 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக உள்ளேன். மரணம் வரை இக்கட்சியின் அங்கத்தவராகவே இருக்கும் விருப்பையும் கொண்டுள்ளேன். 1989, 1994, 2000, 2001, 2004, 2010 ஆகிய ஆண...