எதிர்கால தொழிற்சந்தைக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உண்டு
நாட்டில் உருவாக்கப்படவுள்ள எதிர்கால தொழிற்சந்தைக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உண்டு என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட அல்-ஹிலால் வித்தியாலய பிரதான நுழைவாயில் கோபுர திறப்பு விழாவும் 2014, 2015ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் கல்லூரி மண்டபத்தில் அதிபர் எம்.எஸ்.எம். பைசால் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பாராட்டுகின்ற நிகழ்வு என்பது ஒரு கழியாட்ட நிகழ்வோ அல்லது ஒரு பொழுதுபோக்கு நிகழ்வோ அல்ல. இந்நிகழ்வு பாராட்டை பெறுகின்ற மாணவர்களுக்கு இன்னும் சாதிக்க வேண்டும் என்ற உணர்வை கொடுப்பதோடு ஏனைய மாணவச் செல்வங்களையும் சாதனையாளர்களாக மாற்றுவதற்கு உந்துதலை வழங்குகின்ற நிகழ்வாக அமைகின்றது.
கல்முனை பிராந்தியத்தின் கல்வி நடவடிக்கையில் அல்-ஹிலால் பாடசாலை முன்மாதிரியான சிறந்த பாடசாலையாக திகழ்கின்றது. இதற்கான அத்திவாரம் கடந்த இரண்டு தசாப்த காலத்திற்கு முன்பாகவே இடப்பட்டது. அதிபர் ஜ.எல்.ஏ.மஜீட் அவர்களின் பதவிக்காலத்தில் இப்பாடசாலை முன்னேற்றத்திற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் அதிபர் அவர்களின் வேண்டுதலுக்கு அமைவாக மூன்றுமாடி கட்டடத்திற்கான முதல்கட்ட முதல் மாடிக்கான 20 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்து அதனை பூர்த்தி செய்து கொடுத்தோம். அன்று தொடக்கம் இன்றுவரை இப்பாடசாலையின் முகாமைத்துவ சபை மற்றும் ஆசிரியர் குழாம் சாதனைகளை தக்கவைப்பதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிவருகின்றனர். இவர்களுக்கு இப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அல்ஹிலால் பாடசாலையின் பெறுபேறு ஏனைய பாடசாலைகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து அப்பாடசாலைகளும் சிறந்த பெறுபேறுகளை பெற முயற்சிக்கின்றனர் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகின்றது.
தற்போதைய புதிய அரசின் பிரதமர் ஒரு நிபுணத்துவ தலைமையாக இருக்கின்றபடியினால் பாடசாலைகளின் பகுதீக வளப்பற்றாக்குறைகளை முற்றாக நிவர்த்தி செய்வதற்காக அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழமைதோறும் பாடசாலைகளின் கட்டிடம், தளபாடம் மற்றும் மலசலகூடம் போன்ற பகுதீக வளங்களை பெற்றுவதற்கான கோரிக்கைகளுடன் ஏறி இறங்குகின்ற அந்த அவல நிலை இல்லாதுபோயுள்ளது. இதற்கமைவாக ஏழாயிரம் பாடசாலைகளை ஒரே தடவையில் அபிவிருத்தி செய்கின்ற திட்டத்தை பிரதமர் அவர்கள் ஆரம்பிக்கவிருக்கின்றார்கள். இத்திட்டத்தில் சில காரணங்களுக்காக அல்-ஹிலால் வித்தியாலயம் தவறவிடப்பட்டிருந்தபோது இப்பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என்னுடன் இது தொடர்பாக பேசியிருந்தார்கள். அதற்கமைவாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தற்போது அத்திட்டத்தில் உள்வாங்கப்படாத தரம் 5 தொடக்கம் 9 வரை கல்வி கற்பிக்கின்ற பாடசாலைகள் கல்வி அமைச்சினால் உள்வாங்கப்பட்டு அத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதனால் இப்பிராந்தியத்தின் எல்லா பாடசாலைகளுக்கும் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது.
எதிர்காலத்தில் இலங்கையின் தொழிற்சந்தையில் பல்வேறுபட்ட தொழில்வாய்புகளை இந்த அரசு உருவாக்கவுள்ளது. அந்தவகையில் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி மற்றும் சீன அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. அதேபோன்று அமெரிக்க நிறுவனம் ஒலுவில் துறைமுகத்தை பொறுப்பேற்று அபிவிருத்தி செய்து அங்கு துறைமுகம் சார்ந்த தொழிற்சாலை உருவாக்கப்படவுள்ளது. இவற்றின் மூலம் நாட்டில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்வாய்ப்புகள் உருவாக உள்ளது. எனவே எமது மாணவச் செல்வங்களை எதிர்கால தொழிற்சந்தைக்கு ஏற்றவர்களாக மாற்றி அமைக்கின்ற பாரிய பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உண்டு என பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
Comments
Post a Comment