சாப்பாட்டில் பல்லி: 6 மாத சிறை; கடைக்கு சீல்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் உணவக மொன்றில் இறந்த நிலையில் இருந்த பல்லியுடன் கூடிய சாப்பாட்டுப் பொதியை விற்பனைச் செய்ததாகக் கூறப்படும் உணவக உரிமையாளருக்கு ஆறுமாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள உணவகமொன்றில் இறந்த நிலையில் இருந்த பல்லியுடன் கூடிய சாப்பாட்டுப் பொதியை விற்பனைச் செய்த உரிமையாளருக்கெதிராக நேற்று (29) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆரையம்பதி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.
இதன் போது குறித்த உணவகத்தின் உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது உணவக உரிமையாளருக்கு ஆறுமாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்ததாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த உணவகத்தில், மதிய உணவு பார்சலை வாக்கிய பெண் ஒருவர் அந்த பார்சலை வீட்டுக்கு கொண்டுசென்று பிரித்து, சாப்பிடுவதற்கு தயாராகியபோது சாப்பாடு பொதியிலிருந்த கறிக்குள் இறந்த நிலையில் பல்லி இருந்ததை கண்டுள்ளார்.
இதுதொடர்பில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அப்பெண் அறிவித்ததையடுத்து காத்தான்குடி பொலிஸாருடன் குறித்த உணவகத்துக்கு விரைந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டு, குறித்த உணவகத்துக்கு சீல் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment