ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரான பஷிர் சேகுதாவுத் அரசியலிலிருந்து ஓய்வு


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு
கடந்த 27 வருடகாலமாக செயல்பட்டுவந்த பிரதிநிதித்துவ அரசியல் முறைமையில் இருந்து இன்று தொடக்கம் முழுவதுமாக விலகிக் கொள்ளும் எனது தீர்க்கமான தீர்மானத்தை இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் இவ்வறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்றம், மாகாணசபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் இனிவரும் காலத்தில் ஒரு வேட்பாளராக பங்குபற்றப் போவதில்லை என்றும், எந்தவொரு கட்சியின் தேசியப்பட்டியலிலோ, அல்லது எதிர்காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வரும் வேறு ஏதேனும் முறையிலோ பாராளுமன்றத்திற்கோ மாகாணசபைக்கோ மக்கள் பிரதிநிதியாக செல்லப்போவதில்லை என்பதையும் பகிரங்கமாக அறியத்தருகிறேன்.
1981ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டுவரையான 13 வருடகாலம் ஈரோஸின் அங்கத்தவராக செயல்பட்டேன். 1994ஆம் ஆண்டு தொடக்கம் நிகழும் காலம்வரை 22 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக உள்ளேன். மரணம் வரை இக்கட்சியின் அங்கத்தவராகவே இருக்கும் விருப்பையும் கொண்டுள்ளேன்.
1989, 1994, 2000, 2001, 2004, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆறு பாராளுமன்றத் தேர்தல்களிலும் 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திற்குத் தனியாக நடந்த முதலாவது மாகாணசபைத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளேன். 1989ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, அமைச்சரவை அந்தஸ்;தற்ற அமைச்சராக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக, கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவராக பல தரப்பட்ட பொறுப்புகளில் செயற்பட்டிருக்கிறேன்.
முதன் முதலில் 1989ஆம் ஆண்டு ஈழப் புரட்சி அமைப்பின் சுயேச்சைக்குழு மூலம் கிடைத்த தேசியப்பட்டியலின் ஊடாக பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றேன். 2000, 2001, 2004ஆம் ஆண்டுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினரானேன். 2010 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக மட்டக்களப்பு மாவட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.
1989 ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரையும் பின்னர் 2000ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரையும் பாராளுமன்ற உறுப்பினராகவும், 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை பிரதியமைச்சராகவும், 2007ஆம் ஆண்டில் 10 மாதங்கள் மட்டும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும், 2010இலிருந்து மூன்று வருடங்கள் மீண்டும் பிரதியமைச்சராகவும், 2013இலிருந்து 2015 வரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளேன்.
தமிழ்த்தேசிய அரசியலுக்குள்ளிருந்து 1990களில் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளின் காரணமாக முஸ்லிம்களுக்காகத் தனித்துக் குரல் கொடுக்கும் அவசியத்தினை உணர்ந்தேன். இதனடிப்படையில் பெருந்தலைவர் அஷ்ரஃபின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து முஸ்லிம் தேசிய அடையாள அரசியலுக்குள் நுழைந்தேன். நான் அரசியலில் பிரவேசித்த ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இனங்களுக்கிடையில் ஒரு பாலமாகச் செயற்பட்டுள்ளேன் என்ற மனத்திருப்தி எனக்கிருக்கிறது.
சமகால அரசியல் சூழலில் முஸ்லிம் தேசிய அடையாள அரசியல், தனது இனத்தின் பிரதான அரசியல் அபிலாசையை பலிகொடுக்கும் அளவுக்கு பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கத் துவங்கியிருக்கிறது. இவ்வாறான ஒரு கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இருப்பும், இதன் தலைமைகளின் நம்பகத்தன்மையும் உறுதிப்பாடும் இவைபோல இக்கட்சியின் உயிர்ப்பும், துடிப்பும், தூய்மையும் பாதுகாத்துப் பேணப்படவேண்டியது அத்தியாவசியமாகும்.
இன்றைய முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் சமுதாய ஈடேற்றம் பற்றிய பிரக்ஞையற்று பதவிகளையும், சலுகைகளையும் சௌகரியங்களையும் குறிவைத்தே அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்ற விமர்சனம் முஸ்லிம் குடிமைச் சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றது. இதுமாத்திரமன்றி எந்தவொரு அரசியல் கட்சியிலும் எவரும் நேர்கோட்டை வரைய முற்படுகின்றபோதெல்லாம் பதவிகளை நாடிய மூன்றாந்தர நடவடிக்கைகளாக அவை சோடித்துக் காட்டப்பட்டு நேரிய மாற்றங்களுக்கான முயற்சிகள் தோற்கடிக்கப்படுகின்றன.

எனவே, புறவிமர்சனங்களை சுயவிமர்சனங்களாக மாற்றிக் கொண்டு சோடனைக் குற்றச்சாட்டுக்களுக்குள் இருந்து விடுபட்டு எனது தனிப்பட்ட அரசியல் நம்பகத்தன்மையைக் காத்துக்கொள்ளும் வகையில் பிரதிநிதித்துவ அரசியலில் இனியொருபோதும் ஈடுபடுவதில்லை என்ற கடினமான முடிவுக்கு வந்துள்ளேன். சமகால முஸ்லிம் அரசியலில் பதவிகளைப் பெறும் இலக்குகளற்ற ஒரு பாத்திரத்தின் மூலம் செயலாற்ற முடிவெடுத்துள்ளேன். பிரதிநிதித்துவ அரசியல்வாதியாக அன்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு கடைநிலை உறுப்பினராகவேனும் இருந்து கட்சியைத் தூய்மைப்படுத்தும் பணியில் தீவிரமான அரசியல் செயல்பாட்டாளனாக எனது எஞ்சிய வாழ்நாள் நெடுகிலும் இருக்க விரும்புகிறேன். இதன் மூலம் 35 வருடங்கள் பலதரப்பட்ட அரசியலிலும் நான் பெற்றுக்கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் அரிய வாய்ப்பும் எனக்குக் கிடைக்கும் என மகிழ்வடைகிறேன்.
எனது ஒன்றரை தசாப்தகால இயக்க வாழ்விலும், கால் நூற்றாண்டு கடந்த தேர்தல் முறை அரசியலிலும் பல்லாயிரக்கணக்கான மக்களும், ஒரு இயக்கமும், ஒரு அரசியல் கட்சியும், பல தலைவர்களும் தொடர்புபட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது உணர்வு பூர்மான நன்றியறிதலைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
விசேடமாக ஈரோஸ் இயக்க நிறுவுனர் மறைந்த அண்ணன் இரத்தின சபாபதி, இதுவரை காணாமல்போனவராய்க் கருதப்படும் எனது அரசியல் ஆசான் தோழர் பாலகுமாரன் உட்பட தோழர்கள் அனைவருக்கும், இவ்வாறே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளை நிறுவிய மறைந்த தலைவரும், முஸ்லிம் தேசிய அரசியலில் எனது குருவுமான மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரஃப்புக்கும், என்னை மூன்று தடவைகள் தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் அனுப்பி வைக்க பங்களிப்பு நல்கிய இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள், இந்நாள் உச்சபீட உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் போன்றோருக்கும் மேலும் நான் போட்டியிட்ட ஏழு தேர்தல்களிலும் எனக்கு வாக்களித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கும் எனது இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல எனக்கு பிரதியமைச்சர், அமைச்சர் அந்தஸ்துக்களை வழங்கிய இரண்டு தேசிய கட்சிகளின் அந்தந்தக் காலகட்டத் தலைவர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக, நான் பங்குபற்றிய இயக்க அரசியலிலும் கட்சி அரசியலிலும் நான் வகித்த பாத்திரங்களின் விளைவாக மனிதர்களுக்கு அசௌகரியமோ மனப்பாதிப்போ நடந்திருக்க இயற்கையாகவே வாய்ப்புண்டு. எனவே இவ்வாறு எவருக்கேனும் நிகழ்ந்திருந்தால், அவர்கள் பெருமனது கொண்டு என்னை மன்னிக்குமாறும் வேண்டிக் கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது