தவறான புரிதல்களிலிருந்து முதலமைச்சர் விடுபட வேண்டும்
கிழக்கு மாகாண அபிவிருத்திகளுக்கு முதலமைச்சருடன் இணைந்து ஒத்துழைக்க தயார் எனத் தெரிவித்துள்ள ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ முதலமைச்சர் உட்பட உறுப்பினர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக ஊடகங்கள் சிலவற்றில் கிழக்கு மா காண முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆளுநர் இதுபற்றி மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடற்படை அதிகாரி ஒருவருடனான முரண்பாட்டின் பின்னர் இணையத் தளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகிய விமர்சனங்களைக் காணும்போது பிரச்சினையை திசைதிருப்புவதற்காக முதலமைச்சர் இவ்வாறு செயற்பட்டுள்ளார் என எண்ணுகின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு நான் இணங்குகின்றேன். அவ்வாறான செயற்திட்டங்கள் பற்றி என்னிடம் உதவி கோரியபோது சுயமாக உதவி வழங்குவதற்கு எப்போதுமே முன்வந்துள்ளேன். மாகாண கல்வி அமைச்சர் எஸ்.
தண்டாயுதபாணியின் சம்பூர் மீள்குடியேற்றம், விவசாய அமைச்சர் துரைராஜசிங்கத்திடம் புலம்பெயர்ந்த உறுப்பினர்கள் பிரேரித்த செயற்திட்டங்கள், அவர் பிரதிநிதித்துவம் செய்யும் மாதுருஓயா தெற்குக் கரை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக குறித்த அமைச்சுடன் கலந்துரையாடியமை, முந்தன்ஆறு ஆற்றங்கரையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கான தகவல்களை வழங்குதல் போன்ற விடயங்களில் விவசாய அமைச்சருக்கு அறிவித்து அவரது செயலாரிடம் விடயங்களைச் சமர்ப்பித்தமை, சம்பூர் வித்தியாலயத்திற்கு கடற்படையினர் வழங்கிய வசதிகள் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இது தவிர கடற்றொழில், வெள்ள அனர்த்தம் மற்றும் எதிர்கால கட்டமைப்பு ரீதியான அபிவிருத்தி ஆகிய துறைகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் உதவியமைக்கு மாகாண சபை அமைச்சர்கள் சாட்சியாக உள்ளனர்.
அண்மையில் பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் கிழக்கு மாகாண சுகாதார பணிகளுக்காக 13,500/- மில்லியன் ரூபாவை ஒதுக்கினார். இத்திட்டத்தில் முதலமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு சதமேனும் ஒதுக்கப்படாதிருந்தது. இந்த அநீதி பற்றி எடுத்துக்கூறி மட்டக்களப்பு வைத்தியசாலைகளுக்கான முதலீடு மேற்கொள்ளப்பட நானே தனிப்பட்ட ரீதியில் அமைச்சர் பைசல் காசிமிடம் விடயங்களை முன்வைத்தேன். இதற்கு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட மாகாணத்தின் அனைத்து சுகாதார அதிகாரிகளும் சாட்சியாக உள்ளனர்.
எனவே தவறான புரிதல்களிலிருந்து முக்கிய பொறுப்புக்களிலுள்ள அரசியல்வாதிகள் விடுபட வேண்டுமென்றும் அவர் கேட்டுள்ளார்.
Comments
Post a Comment