கல்முனை மக்கள் வங்கியின் பொன்விழா கொண்டாட்டங்கள்
மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டு 50 வது வருட நிறைவை முன்னிட்டு இன்று நாட்டிலுள்ள 338 வங்கி கிளைகளிலும் பொன் விழாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. கல்முனை மக்கள் வங்கி கிளை ஏற்பாடு செய்த நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு கல்முனை மக்கள் வங்கி கிளை முகாமையாளர் எம்.ஐ.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸனலி, பைசால் காசிம், கல்முனை மாநகர முதல்வர் இஸட்.எம்.மசூர் மௌலானா உட்பட முன்னாள் வங்கி முகாமையாளர்கள், பாடசாலை அதிபர்கள், வாடிக்கையாளர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்து, பௌத்த, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், 50 பலூன்களும் வானில் பறக்கவிடப்பட்டன. இதிலுள்ள ஒரு பலூனில் பணவவுச்சர் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இதனைப் பெறுபவர் நாட்டிலுள்ள எந்தவொரு வங்கிக் கிளையிலும் சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இன்றைய தினம் வாடிக்கையாளர்கள் 50 பேருக்கு கடன் தொகைக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.