இன கலவர தாக்குதல் தொடர்பில் 445 முறைப்பாடு; 280 பேர் கைது
- 10 பிரதான சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணை - இன முறுகலை ஏற்படுத்தும் ஆயிரக் கணக்கான போஸ்டர்களும் மீட்பு கடந்த வாரம் கண்டி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற இன கலவர தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கடந்த 4 ஆம் திகதி தொடக்கம் நேற்று (12) வரையில் வீடுகள், கடைகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 445 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத்தகவலை தெரிவித்தார். 445 முறைப்பாடுகளில் கண்டியில் மட்டும் 423 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, ஏனைய பிரதேசங்களில் சேதங்கள் தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வணக்கஸ்தலங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் கண்டியிலிருந்து 19 முறைப்பாடுகளும், ஏனைய பகுதிகளிலிருந்து 5 முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கலவரங்கள் தொடர்பில் மொத்தமாக 280 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, கண்டியில் மாத்திரம் 178 பேர் கைது செய்யப்பட்டு...