மகாநாயக்கர் என்ன ஆண்டவனே வந்தாலும் என் சமூகம் பற்றிய உண்மையைத்தான் சொல்வேன் , சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வதுதான் எனக்குள்ள பொறுப்பு -அமைச்சர் றிஸாத்
முஸ்லிம்கள் தங்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் பள்ளிவாசல்களை இனவாதிகள் மோசமாகத் தாக்கி, உடைத்து, எரித்தபோதும்அந்தச் சமூகத்தினர் இன்னும் பொறுமையாக இருக்கின்றனர் என்றால், அவர்கள் ஆயுதத்தின் மீதோ, தீவிரவாதத்தின் மீதோ நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர் என்பதையே அது உணர்த்துவதாக, அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெளிவுபடுத்தினார்.
சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், இன்று காலை கண்டிக்கு விஜயம் செய்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டகுழுவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் அங்கம் வகித்திருந்தார்.
இந்தக் குழு அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை தனித்தனியாகச் சந்தித்திருந்தது. அமைச்சர் ரிஷாட் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அம்பாறையில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற பிரச்சினைக்காக, ஒருசில மணி நேரங்களுக்குள், அந்த ஹோட்டலுக்கு தொலைவில் இருந்த பள்ளிவாசல்களை உடைத்து சேதப்படுத்தியும், அங்கு பணிபுரிந்த மௌலவியையும் அடித்து காயப்படுத்தியுள்ளார்கள்.
பள்ளிவாயலுக்கு அருகில் இருந்த இன்னும் இரண்டு ஹோட்டல்களையும் தீவைத்து, எரித்து நாசமாக்கியுள்ளனர்.
அதேபோன்று திகன, தெல்தெனியவிலும்தனிநபர் சிலருக்கிடையே இடம்பெற்ற பிரச்சினையால்,சிங்கள் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை காரணமாக வைத்து, கண்டி மாவட்டத்திலே முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும், சொத்துக்களையும்அ டித்து நொருக்கி, எரித்து நாசமாக்கியுள்ளார்கள்.
சட்டத்தை கையில் எடுக்க எவருக்கும் அனுமதிக்க முடியாது. இவ்வளவுஅழிவுகளும், துன்பங்களும் நடந்த பின்னரும், முஸ்லிம்கள் சட்டத்தை ஒருபோதும் கையில் எடுக்கவில்லை. நாங்கள் ஆயுதத்தின் மீது எந்தக் காலத்திலும் நம்பிக்கை இல்லாத ஒருசமூகம் ஆகும்.
இலங்கைமுஸ்லிம்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என்றும், ஆயுதங்கள் வைத்திருக்கின்றார்கள் என்றும் சொல்லுகின்றார்கள்.
இந்தக் குற்றச்சாட்டு நியாயமானதல்ல. அப்படியென்றால் இந்த நாட்டில் காவல்துறை இருக்கின்றது. உளவுத்துறை இருக்கின்றது. முஸ்லிம்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ஏன் அவர்களை கண்டுபிடித்து, கைது செய்ய நடவடிக்கை எடுக்கக் முடியாது?
அதேபோன்று, மலட்டுத்தன்மையுள்ள மருந்தை உணவுப்பண்டங்களில் முஸ்லிம்கள் போட்டு கொடுத்தார்கள் என்றால், அவற்றை ஏன் கண்டுபிடிக்க முடியாதுள்ளனர் என்றும் அமைச்சர் தேரர்களிடம் தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் மகாநாயக்க தேரர்கள், வில்பத்துக் காட்டைஅமைச்சர் ரிஷாட் அழித்து மக்களை குடியேற்றுவதாக ஒரு குற்றச்சாட்டு இருப்பதாக தெரிவித்த போது, அமைச்சர், அதற்கும் தேரரர்களிடம் விளக்கமளித்தார்.
“சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், வட மாகாணத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், தாம் வாழ்ந்த இடங்களில் மீண்டும் மீளக்குடியேறுவதற்காக, அவர்கள் வாழ்ந்த காணிகளில் வளர்ந்திருந்த காடுகளை துப்புரவாக்கிய போது, இந்தக் குற்றச்சாட்டு என்மீது எழுந்தது.
நானும் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு அகதியே. இனவாத நோக்கத்தில் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதற்காக வேண்டுமென்றே இவ்வாறான கதைகளை பரப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில்,ஜனாதிபதிவிசாரணை குழுவொன்றை நியமித்து, அந்த விசாரணை அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட போதும், இதுவரை அதுவெளிப்படுத்தப்படவில்லை.
சபாநாயகரிடமும் இந்த விவகாரத்தின்உண்மைத் தன்மையை அறிவதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து, விசாரணை செய்யுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். தவறு இருந்தால் உரியவர்களுக்குத் தண்டனைவழங்க நடவடிக்கை எடுங்கள் என்று நாங்கள் வேண்டியுள்ளோம்.
இனவாதிகள் இல்லாத பொல்லாத விடயங்களைக் கூறி, முஸ்லிம்கள் மீது வீண்பழி போடுகின்றனர். எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒருபோதும் தவறு செய்யவில்லை என்று அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர், மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில், சபாநாயாகர் கருஜயசூரிய தலைமையில், மத்திய மாகாண ஆளுநர் நிலுக்காஏக்கநாயக்கவுடனான உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்தியமாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க,பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உட்பட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
அந்தக் கூட்டம் முடிந்ததன் பிற்பாடு, சபாநாயகர் தலைமையிலான குழு, பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், உலமாக்கள் ஆகியோரை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தது
அதன் பின்னர் சபாநாயகர் தலைமையிலான குழு, பாதுகாப்புப் படை தரப்பினருடன் ஒரு முக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டது. ஆளுநர், பொலிஸ்மா அதிபர் முப்படைத் தளபதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.
இந்தஉயர்மட்டக் கூட்டங்கள் நிறைவடைந்தன் பின்னர், கண்டிகத்தோலிக்க பேராயரை குழுவினர் சந்தித்தனர். அதன் பின்னர் சபாநாயகர் தலைமையிலான குழு, திகன பல்லேகொல்லவுக்கு விஜயம் செய்தது.
அங்கு கலவரத்தில் மூச்சுத் திணறி மரணமான முஸ்லிம் இளைஞரின் வீட்டுக்குச் சென்று, குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்னர். பின்னர் அந்தக் கிராமத்தில் முற்றாக சேதமடைந்த பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களை குழுவினர்பார்வையிட்டனர்
சாபாநாயகர் தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட போது, ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி தலைமையிலான முக்கியஸ்தர்களும் இணைந்து கொண்டனர்.
Comments
Post a Comment