பிரதமரை திருப்திப் படுத்த பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எதிராக எடுக்கவிருந்த ஒழுக்காற்று நடவடிக்கை முயற்சி பெரும்பான்மையான உச்சபீட உறுப்பினர்களின் எதிர்ப்பினால் தோல்வி.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு இனவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அரசுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிராக மிகக் காட்டமாக உரையாற்றியமை தொடர்பில் ஹரீசுக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கட்சியின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் சிலரால் முன்மொழியப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டம் நேற்று (11) ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைமையகமான தாறுஸ் ஸலாமில் 4 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றபோதே மேற்படி ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் முன்மொழியப்பட்டது.
இவ் உயர்பீடக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சமகால இனவாத தாக்குதல் சம்பங்கள் மற்றும் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.
இதன்போது கட்சியின் செயலாளர் மற்றும் சில முக்கிய உறுப்பினர்கள், பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமருக்கு எதிராக பேசியமைக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்கள் நடந்தபோதிலும் பிரதமரையும் அரசையும் பாதுகாக்க வேண்டும், அரசாங்கத்தை நாங்கள் குற்றம் சாட்ட முடியாது, என்ன விடயம் நடந்தாலும் நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற தொனியில் பேசிய இவர்கள் பிரதமருக்கு எதிராக பேசுவதற்கு இவருக்கு அனுமதி அளித்தது யார்? எனவும் வினாவெளிப்பினர்.
இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பட்டும் படாமலும் சில விடயங்களை பேசுகின்றபோது உயர்பீட உறுப்பினர்களுள் பெரும்பான்மையானோர் ஒவ்வொருவராக எழுந்து பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு எதிராகப் பேசினர்.
உயர்பீட உறுப்பினர்கள் பலர் பேசுகையில், நாட்டில் முஸ்லிம் சமூகம் இருக்கின்ற நிலைமை தெரியாமல் பேசுகின்றீர்கள், முஸ்லிம் சமூகம் பெரும் ஆபத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் நடைபெற்ற இன வன்முறைச் சம்பவங்களின்போது அரசு உரிய நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறியதனால் தான் இப் பெரும் கொடூரச் சம்வங்கள் நடந்துள்ளதாக முஸ்லிம் சமூகம் தீர்மானித்துள்ளது. இதனால் அரசின் மீதும் பிரதர் மீதும் முஸ்லிம் சமூகம் கடும் அதிருப்தியில் இருக்கின்றது.
பிரதி அமைச்சர் ஹரீஸ் அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் நடைபெற்ற இனவாத தாக்குதல் சம்பவங்களின்போது களத்திருந்து செயற்பட்டவர் என்றவகையில்; அம்மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு எமது சமூகத்தின் அதிருப்தியை பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றார். அத்தோடு இச் சமூகத்தின் அவல நிலையை விரிவாக தெளிவுபடுத்தி இருக்கின்றார்.
குறித்த இனவாத சம்பவங்களின்போது களத்தில் நின்று செயற்பட்டதோடு பாராளுமன்றத்திலும் அது தொடர்பில் உணர்வுபூர்வமாக பேசியதனால் சமூகம் அவரை இன்று சமூகத்திற்காக குரல்கொடுக்கின்ற ஒருவர் என்று அடையாளம் கண்டிருக்கிறது. அதற்காக அவரை எல்லா மூலை முடுக்குகளிலும் பாராட்டுகின்றனர். இவரின் குறித்த பாராளுமன்ற உரையினால் கட்சியினுடைய ஆதரவுத் தளம் கூட பாதுகாக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான ஒரு நிலைமையில் கட்சி இவரின் உரையை அனுமதிப்பதை விட்டு விட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முற்பட்டால் கட்சிக்கு மிகப் பெரும் பின்னடைவும் வீழ்ச்சியும் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டியதோடு. கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கின்ற முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவ் உயர் பீட கூட்டத்திற்கு வருகை தந்திருந்த நாடு பூராகவும் உள்ள கட்சியின் முக்கியஸ்தகர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், உச்ச பீட உறுப்பினர்கள் எல்லோரும் பெரும்பான்மையாக எழுந்து நின்று கடுமையான முறையில் கட்சித் தலைமைக்கு வலியுறுத்தினர்.
இவ்வாறு பிரதி அமைச்சருக்கு ஆதரவாக கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பேசுவதையிட்டு கட்சித் தலைமை, ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்க முயற்சித்த கட்சியின் செயலாளர் மற்றும் முக்கிய உறுப்பினர் சிலரும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் பிரதி அமைச்சர் ஹரீசுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசியவர்கள் களத்திற்குச் செல்லாததனால் மக்களுடைய உணர்வை புரியாமல் இவ்வாறு பேசுகின்றார்கள் என சில உறுப்பினர்கள் தெரிவித்தனர். விரும்பியோ விரும்பாமலோ பிரதி அமைச்சர் களத்திலிருந்து அந்த மக்களின் உணர்வுகளுடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டார். இதனால் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் ஒரு குறையுமில்லை. இதற்காக அவர் மீது யாரும் புறாமைப்பட வேண்டிய அவசியமும் இல்லை. எனவே தலைவர் உடனடியாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் விடயத்தை கைவிட வேண்டும் என்று கோரினர்.
பெரும்பான்மையான கட்சியின் உறுப்பினர்கள் பிரதி அமைச்சருக்கு சார்பாக நியாயமாக பேசியதைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் ஹரீஸ் அரசுக்கும் பிரதமருக்கும் எதிராக பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் ஹரீஸின் குறித்த பாராளுமன்ற உரையினால் பிரதமர் கடும் குழப்பத்திற்குள்ளாகி உள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் தொடர்புகொண்டு பேசியதனால் பிரதமரை திருப்திப்படுத்துவதற்காகவே குறித்த ஒழுக்காற்று முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அறியவருகிறது.
இவ்வாறு முயற்சித்தமையினை கேள்வியுற்ற நாடு பூரகாவுமுள்ள முஸ்லிம் சமூகம் மிகுந்த ஆத்திரமும் ஆவேசியமும் அடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment