செய்திNews

21 May 2013

சாய்ந்தமருது அபிவிருத்தி பணிகள் வைபவம் மறுநாள் ஒத்திவைப்பு


கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த வாசிக சாலை திறப்பு விழாவும், 100 வறிய குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வும்,  மாநகர சபை உத்தியோகத்தர் கௌரவிப்பும் மற்றும் வாசிப்பு வார பரிசளிப்பு நிகழ்வும் நாளை (22.05.2013) மாலை 3.00 மணியளவில் சாய்ந்தமருது பீச் பார்க் அருகாமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருந்த நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் நாளை (22.05.2013) நடைபெற உள்ள விசேட அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதனால் இந்நிகழ்வானது ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக எதிர்வரும் 23.05.2013 ம் திகதி வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு சாய்ந்தமருது பீச் பார்க் அருகாமையில் நடைபெற உள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலயத்திற்குகல்முனைமுதல்வர்ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு




சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலயத்திற்கு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் நிதி ஒதுக்கீட்டில் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் எல்.கே.ஏ. அன்வர் தலைமையில் நேற்று (20.05.2013) காலை நடைபெற்றது.
அல் கமறூன் வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டியின் போது பிரத அதிதியாக கலந்து சிறப்பித்த மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடம் அதிபரினால் வித்தியாலயத்தின் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அம்மகஜரிக் கேற்பவே குறித்த ஒலிபெருக்கி சாதனங்கள் முதல்வரினால் வழங்கிவைக்கப்பட்டது.
புலமைப்பரிசில் பரீட்சையில் 70ற்கும் 100ற்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  





இதன்போது கல்முனை மாநகர முதல்வரின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவித்து வாழ்த்துப் பாவும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு கல்முனை கல்வி வலயத்திற்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹசீம் அவர்களினை வரவேற்றும் அவரின் சேவையினை பாராட்டியும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

20 May 2013

நற்பிட்டிமுனை ஆசிரியரின் மோட்டார் சைகள் கல்முனையில் களவு

நற்பிட்டிமுனை ஆசிரியர் ஐயூப்கானின் EP  JG-9065  இலக்க  பெசன்  ப்ளஸ்  மோட்டார்  சய்கள் நேற்று களவு போய்  உள்ளது.  கல்முனை இலங்கை மின்சார சபையில் மின் கட்டணம் செலுத்த சென்ற இவர் முன் வாயிலில் சைகளை வைத்து விட்டு சென்று பணத்தை செலுத்தி விட்டு வந்து பார்த்த வேளை  சைகள் வைத்த  இடத்தில்  காணவில்லை . இது தொடர்பாக ஆசிரியர் கல்முனை பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .

ஒரு மாத காலத்துக்குள் கல்முனையில் மூன்று மோட்டார் சைகல்கள்  களவு பொய் உள்ளதாக  கல்முனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த EP  JG-9065  இலக்க  பெசன்  ப்ளஸ்  மோட்டார்  சைகள்  பற்றி தகவல் தெரிந்தவர்கள் 0776653852 இலக்க  தொலை பேசிக்கு தகவல் வழங்கவும் .

19 May 2013

மட்டக்களப்பு வாகன விபத்தில் இருவர் பலி


ஏறாவூர் மைலம்பாவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழரை மணியளவில் இவ்விபத்து நேரிட்டுள்ளது.
 
மோட்டார் சைக்கிள் வீதியில் மோதுண்டு தடக்கி விழுந்ததிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் பின்னால் அமர்ந்து சென்றவரும் வீதியில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் பட்டதில் பலியாகியுள்ளனர்.
 
ஏறாவூரைச் சேர்ந்த அஹமது லெப்பை முஹம்மது அஸ்மி மற்றும் பிச்சைக்குட்டி முஹம்மது றியாழ் ஆகிய இருவரே கொல்லப்பட்டுள்ளனர். சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
இருவரும் ஏறாவூரில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
 
மரணித்தவர்களில் ஒருவரான அஹமது லெப்பை முஹம்மது அஸ்மி என்பவர் மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர் என்று தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

18 May 2013

மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிக்க இடமளியேன்!






-யுத்த வெற்றி விழாவில் ஜனாதிபதி-

வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற  வைபவத்தில் அதிதிகளின் வருகைக்கு பின்னர் குதிரைப்படை மற்றும் மோட்டார் படையணிகள் புடைச்சூழ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் பிரதான மேடைக்கு வருதகை தந்தனர்.

அவர்களை பிரதமர் தி.மு.ஜயரட்னவும் அவரது பாரியாரும்- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியாரும்; வரவேற்றனர்.

அதன் பின்னர் பாதுகாப்பு படைகளைச்சேர்ந்த 40 வீரங்கணைகள் தேசிய கீதமிசைக்க ஜனாதிபதியினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

முப்படைகளின் மரியாதையை ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஜனாதிபதி படைகளின் அணிவகுப்பை விசேட வாகனத்தில் சென்று பார்வையிட்டார்.

அதற்கு பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்-

தாய் நாட்டை மீட்டெடுத்தமைக்கான வெற்றிவிழாவை நான்காவது ஆண்டாகவும் கொண்டாடுவதையிட்டு பெருமையடைகின்றேன்.

இலங்கை வரலாற்றில் தாய்நாடு ஒன்றிணைக்கப்பட்ட சிரேஷ்டத்துவமான சந்தரப்பமாகும். அதுமட்டுமன்றி மரணபயம் நீக்கப்பட்டு சுதந்திரமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த சிரேஷ்டத்துவமான சந்தர்ப்பமாகும்.

அவற்குக்கப்பால் மனித கேடயங்களாக தடுத்துவைக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களை மீட்டெடுத்த சிரேஷ்டத்துவமான சந்தர்ப்பமாகும்.

தாய்நாட்டை மீட்டெடுப்பதற்காக இலட்சக்கணக்கானோர் பலியானார்கள்- கண்-காது- அவயவகங்களை இழந்தனர். இரத்தம் மற்றும் வியர்வையை பூமிக்கு பூஜை செய்தனர்.

அவ்வாறான சிரேஷ்டத்துவமிக்க படையினரை சிலர் சர்வதேச தூக்கு மேடைக்கு கொண்டுச்செல்வதற்கு முயற்சித்தனர். இன்னும் சிலரோ படையினருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான நலன்புரி விடயங்களை செய்துவருகின்றனர்.

எதிர்காலத்திலும் நம்பிக்கையுடன் நாட்டுக்கு சேவையாற்றுவோம் என்ற மனநிலையை நாம் உருவாக்கி வருகின்றோம். அதற்கான சேவைகளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

ஒரு காலத்தில் காலி முகத்திடல் மூடப்பட்டிருந்தது. மத்தியவங்கி கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. அதற்கு அருகிலிருக்கின்ற ஜனாதிபதி மாளிகைக்கும் குண்டு லொறி அனுப்பப்பட்டது. அவற்று அருகிலிருக்கின்ற ஹோட்டல்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அனுராதபுரம் மகாபோதி விஹாரையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1990 களில் காத்தான்குடியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாத்தறையில் நடத்தப்பட்ட முஸ்லிம் பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் இன்னும் சுகமடையாத நிலையில் இருகின்றார்.

நாட்டில் பல இடங்கள் மற்றும் சந்திகள் புலிகளினால் தாக்குல்கள் நடத்தப்பட்ட சந்திகளாவும் இடங்களாகவுமே அடையாளம் காணப்பட்டன. அவ்வீதியாக இன்றேல் அந்த இடங்களை கடந்து செல்கையில் இந்த இடத்தில் தான் ஜனாதிபதி பிரேமதஸா கொல்லப்பட்டார்.

இந்த சந்தியில் தான் பாரமி குலத்துங்க கொல்லப்பட்டார் என்று அடையாளப்படுத்துகின்றனர். என்னிடம் சில இடங்களை அடையாளப்படுத்தினர்.

நாட்டில் எங்கும் எவ்விடத்திற்கும் சென்று எதனையும் செய்யும் வகையில் புலிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட காலமொன்றும் இதயத்தில் மரணபயமிருந்த நாடாகவும் இந்நாடு இருந்தது. மக்களை மீட்டெடுப்பதற்கு யாருமே முன்வரவில்லை.

மக்கள் தாக்கப்பட்டபோது  ஆறில் ஐந்து பங்கு அதிகாரத்துடன் இருந்த ஜனாதிபதி மக்களே தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டார். புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்துதவிய ஜனாதிபதி புலிகளினாலேயே கொல்லப்பட்டார்.

புலிகளின் குண்டுத்துளைக்காத ஆடையை வழங்கி சமாதானத்திற்கு அழைத்துவந்த இந்திய பிரதமரையும் புலிகள் இந்தியாவில்வைத்தே கொலைச்செய்தனர்.

புலிகளுடன் மோதவேண்டாம் அவர்கள் கேட்பதைகொடுக்குமாறு சர்வதேசம் எங்களிடம் அடிக்கொருத்தடவை கேட்டது. எனினும்- நாம் இளைஞர்களின் சக்தி மற்றும் வீரத்தில் நம்பிக்கைக்கொண்டோம்;. பயத்தை இல்லாது செய்து நம்பிக்கையூட்டினோம்.

அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி சிறுபிள்ளைகளின் இதயங்களுக்கே நன்றாக புரிகின்றது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக நாட்டை பிரித்து கொடுக்கவும் முயற்சித்தனர். அவ்வாறானவர்களே குளங்களை கட்டிய மன்னனான மஹாசேனனின் பெயரை புயலுக்கு சூட்டுமாறு 2003 ஆம் ஆண்டு பரிந்துரை செய்தனர்.

யுத்தம் செய்த யுகமாக அல்ல- டயர்கள் போட்டப்பட யுகமாக அல்ல- யுத்தம் நிறைவடைந்த- இரத்த கங்கை நிறுத்தப்பட்ட யுகம் மற்றும் நாட்டை முன்னோக்கிய யுகமாக மாற்றவேண்டும்.

வடமாகாணத்தை பொறுத்தவரையில் 12 கட்சிகள் தங்களுடைய அரசியல் செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுக்கின்றனர். பயந்துக்கொண்டு கொழும்பிலிருந்து அன்று அரசியல் செய்தவர்கள் இன்று எவ்விதமான அச்சமும் இன்றி அரசியல் செய்கின்றனர்.

வடக்கு கலாசாரத்தை நாசப்படுத்துவதற்கு பிரபாகரனும் புலம் பெயர்ந்தவர்களும் முயற்சித்தனர். மனித கேடயங்களாக தடுத்துவைக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்தபோது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

புலம்பெயர்ந்தவர்களும் முன்வரவில்லை அவர்களுக்கு இராணுவமும் அரசாங்கமுமே உணவுக்கொடுத்தது.

தூக்குமேடை வரை செல்லவேண்டியவர்களுக்கு நாம் மன்னிப்புக்கொடுத்தோம். பலர் புனர்வாளிவளிக்கப்பட்டுள்ளனர். வேறு நாடுகளில் இவ்வாறான நடைமுறை இல்லை .

சிவில் படைக்கு தமிழர்கள் 4000 பேரை இணைத்துள்ளோம். முப்படைகளிலும் இணைவதற்கு வரிசைகளில் நிற்கின்றனர்.

படைகளில் தமிழர்கள் இணைவதை தெற்கில் உள்ளவர்கள் எதிர்க்கவில்லை வடக்கில் உள்ள சிலரும் புலம்பெயர்ந்தவர்களுமே எதிர்த்தனர்.

அதனால் தான் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது கிளிநொச்சியில் அந்த பிரேரணைக்கு எதிராக மக்கள் அணித்திரண்டு எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கு மக்களின் இதயங்களை நான் நன்கறிவேன். ஒருத்தேர்தலில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தனர்.

காலத்திற்கு காலம் புரட்சி-ஊடகசுந்திரம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் குரல்கொடுப்பர் அதகெல்லாம் நான்கு மாதங்களுக்கு ஒருதடவை நாங்கள் பதிலளித்து கொண்டிருக்கின்றோம் என்பதுடன் ஒரு அங்குலத்தையேனும் பறிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் இடமளியேன் என்றார்




17 May 2013

விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும் - எச்சரிக்கை சுவரொட்டிகள்!

வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக வைத்தியசாலை அருகில் கடந்த வாரம் இதே போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டடிருந்தன. இதனை தொடர்ந்து அப்பிரதேசத்தில் நடமாடி வந்த விபசாரிகளை குறைவடைந்த நிலையில் நேற்று வியாழக்கழமை இரவு முதல் மீண்டும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு நகரின் ஹோட்டகளிலும், சட்டவிரோதமாக நடத்தப்படும் விபசார விடுதிகளிலும் பாதுகாப்புடன் பெண்கள் பலர் விபசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வீதியோரத்தில் நின்றபடி விபசாரத்திற்காக ஆண்களை அழைக்கும்; பெண்களுக்கு இந்த எச்சரிக்கையானது அவர்களை பெரிதும் அச்சம் கொள்ளச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

விபசாரத்தை ஒழிப்பதற்கு உடனடியாக ஒன்று சேருவோம், விபசாரிகளுக்கு இனிமேல் தண்டனை அசிட் ஆகும் போன்ற வாசகங்கள் சிங்களத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகளே இனந்தெரியாத நபர்களால் அங்கு ஒட்டப்பட்டுள்ளன

கிழக்கு மாகண சபையின் மாவட்ட அபிவிருத்திக்கூட்டம்!



கிழக்கு மாகண சபையின் மாவட்ட அபிவிருத்திக்கூட்டம்  இன்று திருகோணமலையில்லுள்ள பிரதம செயளாலர் காரியாலயத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாணசபையினூடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களையும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களையும் கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்து முதலமைச்சர்  கிழக்கு மாகாண அமைச்சரவையில் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கேற்ப கிழக்கு மாகாணத்தில் 3 மாவட்டங்களிலும் 4 மாதத்திற்கொருமுறை இவ்வாறானதொரு அபிவிருத்திக் கூட்டம் நடைபெறும்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ.எம். சரத் அபய குணவர்தண மற்றும் உயர் அதிகாரிகள், திருகோணமலை மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

16 May 2013

மட்டக்களப்பு பாலாமீன் மடு ஆயுதம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


விடுதலை புலிகளால் மறைத்து வைக்கப் பட்டதாக தெரிவிக்கப்படும்  ஒரு தொகுதி ஆயுதம்  மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 17 கண்டெடுக்கப்பட்டுள்ளது .

மட்டக்களப்பு பாலாமீன் மடு திரா மடு கிராமத்தில் பாழ் வீடொன்றில் மறித்து வைக்கப்படிருந்த ஆயுதங்களே மட்டக்களப்பு புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை 3.00 மணிக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பிரதேசம் சுற்றிவளைக்கப் பட்டு  45 கைக்குண்டுகளும் ,11 மிதி வெடிகளும் கைப்பற்றப்பட்டிருபதாக மட்டக்களப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக புலன் விசாரணை நடத்தி வருவதாகவும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார் 

15 May 2013

கல்முனை வலயக்கல்வி அலுவலகசித்திரை புத்தாண்டு விழா


கல்முனை வலயக்கல்வி அலுவலக நலன் புரி சங்கம்  ஏற்பாடு செய்த சித்திரை புத்தாண்டு விழா இன்று  ( 16) வலய கல்வி அலுவலக முற்றத்தில் இடம் பெற்றது 

வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் தலைமையில் நடை பெற்ற  இவ்விழாவில் கணக்காளர் நிருவாக உத்தி யோகதர்  பிரதிகல்வி பணிப்பாளர்கள்; உதவி கல்வி பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர் 
காலை மாலை நிகழ்வுகளாக  விளையாட்டு நிகழ்வுகளும் மேடை நிகழ்வுகளும் நடை பெற்றது. இவ்விழாவில் வலய கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பங்குபற்றும் பல போட்டி நிகழ்வுகள் ஒழுங்கு படுத்தப்பட்டு நடை பெற்று பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது  
படங்கள் இணைக்கப்பட்டுள்ளது 

video

கல்முனை மாநகர சபையில் ஆசிய மன்றத்தின் செயற்பாடுகள் நீடிப்பு!


கல்முனை மாநகர சபையில் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தினை மேலும் இரண்டு வருடங்களிற்கு தொடர்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (14) முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதன்போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் சுபாகரனிடம் கையளிக்கப்பட்டது. இதன் மூலம் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஆசிய மன்றத்தின் இச்செயற்பாடு கல்முனை மாநகர சபையில் தொடரப்படவுள்ளது. 

முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் சுபாகரன், திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத், முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ஏ.எல்.எம்.இன்சாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.