அப்பாவி மக்களை இலக்கு வைக்கும் அடிப்படைவாதத்தை பூண்டோடு ஒழிக்க ஆதர
முஸ்லிம் பெரியார்கள், உலமாக்கள், முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக வலியுறுத்து
பிறமத சகோதரர்களைப் படுகொலை செய்து ஈடேற்றம் பெறலாமென்ற கோட்பாடு இஸ்லாத்தில் இல்லையெனவும் வன்முறைகளிலீடுபடும் எந்த அமைப்புக்களும் இஸ்லாத்துக்கு உரிமை கோர முடியாதெனவும் முஸ்லிம் பெரியார்கள், உலமாக்கள், முஸ்லிம் அமைச்சர்கள் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்ற நிலையால் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் நேற்று (22) கொழும்பு தபால் தலைமையகத்தில் விசேட கூட்டம் நடத்தப்பட்டது.
அமைச்சர் ஹலீம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், இஷாக் ரஹ்மான், சூரா கௌன்ஸில் தலைவர் தாரிக் மஹ்மூத், ஜெம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்ததாவது,
சாந்தி மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் வன்முறைகளை விரும்புவதில்லை. இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமுமில்லை. மதத்தின் பெயரால் தாக்குதல் நடத்தி இஸ்லாத்துக்கு உரிமை கோரும் சகல அமைப்புக்களையும் நிராகரிக்கிறோம்.
பதிவு செய்யப்படாத சில அமைப்புக்கள் இஸ்லாத்தின் பெயரில் இயங்குவதாகக் கூறிக் கொண்டு அடிப்படை வாதத்தை தூண்டும் முயற்சிகள் முளையுடன் கிள்ளியெறியப்பட வேண்டும். இந்த முயற்சிகளுக்கு பாதுகாப்புத் தரப்பினர் எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் நாம் பூரண ஆதரவு வழங்குவோம். அரசியல் ரீதியாக மட்டுமன்றி முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் உலமாக்களும் இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளனர்.
அப்பாவிகளை இலக்கு வைக்கும் அடிப்படைவாதத்தை பூண்டோடு ஒழிப்பதற்கான முயற்சிகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம். வன்முறைகளூடாக இலட்சியங்களை அடைய முனையும் தீய சக்திகளுக்கும் நாங்கள் பின்பற்றும் அமைதி மார்க்கமான இஸ்லாத்துக்கும் எவ்விதத் தொடர்புகளும் இல்லை. சமீபகாலமாக முளையெடுத்துள்ள சில அமைப்புக்கள் இஸ்லாத்தின் பெயரால் கட்டவிழ்க்கும் காடைத்தனங்களை முஸ்லிம்கள் அடியோடு வெறுத்து நிராகரிக்கின்றனர்.
நாட்டிலுள்ள தேவாலயங்கள் உட்பட சகல மத ஸ்தலங்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
தேவாலயத் தாக்குதல்களில் உயிரிழந்த சகல இறைவிசுவாசிகளுக்கும் எமது சார்பாகவும் முஸ்லிம் சமூகத்தின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே எமது வேண்டுதல்.
மனித குலத்துக்கு எதிரான இந்தப் பாரிய குற்றத்தைச் செய்தோர் யாராக இருந்தாலும் அவர்களைக் கடுமையான தண்டனைக்குள்ளாக்க வேண்டும். இதன் மூலம் ஏனைய தீய சக்திகளை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் கோரிக்கை விடுத்தனர்.
Comments
Post a Comment