இராஜாங்க அமைச்சரின் அதிரடி நடவடிக்கையினால் கல்முனை மாநகர சபைக்கு 31 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன எல்.ஈ.டி தெருமின்விளக்குகள் அன்பளிப்பு.
(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீபினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் கல்முனை நகரை ஒளியூட்டும் செயற்திட்டத்திற்கு தென் கொரிய நாட்டின் பல்தேசிய கம்பனியான எம்.பி.ஜி குறூப் நிறுவனம் 31 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெருமின்விளக்குகளை கல்முனை மாநகர சபைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.
மிகக் குறைந்த மின் நுகர்வினைக் கொன்ட இந்த நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெருமின்விளக்குகள் இலங்கையில் முதன் முதலாக கல்முனையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்தெருமின் விளக்குகள் அங்கீகரிக்கப்பட்டவர்களின் செல்லிடத் தொலைபேசி ஊடக இதன் இயக்கப்பாட்டை செயற்படுத்தக் கூடிய நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும்.
அன்பளிப்புச் செய்யப்பட்ட இத்தெருமின் விளக்குகளை பொருத்தும் பணி கொரிய நாட்டிலிருந்து வருகைதந்துள்ள பொறியியலாளர்களின் கண்காணிப்பில் இன்று (9) புதன்கிழமை முன்னெடுக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் அழைப்பின் பேரில் தென் கொரிய நாட்டின் எம்.பி.ஜி குறூப் நிறுவனத்தின் பிரதித் தலைவி ஹென் யூஜின் கல்முனை நகருக்கு வருகைதந்து கல்முனை மாநகரை ஒளியூட்டும் இவ்வேலைத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு நாளைய தினம் கையளிக்கவுள்ளார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் ரகீப் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Comments
Post a Comment