கல்முனையில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த 02 டம்ப் ட்ரக் கொள்வனவு
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்காக மாநகர சபையினால் இரண்டு Dump Truck (டம்ப் ட்ரக்) கனரக வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேற்கொண்ட அவசர நடவடிக்கையின் பயனாக சபையின் சொந்த நிதியில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபா எட்டு இலட்சம் ரூபா செலவில் இவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஒரு சில தினங்களில் இவை சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் முதல்வர் செயலகம் தெரிவித்துள்ளது.
திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதில் மாநகர சபை எதிர்நோக்கி வருகின்ற பாரிய சவாலை வெற்றி கொண்டு, விணைத்திறன் மிக்க சேவையை முன்னெடுக்கும் பொருட்டு, முதல்வர் பதவியை பொறுப்பேற்றது தொடக்கம் அவர் மேற்கொண்டு வருகின்ற மூலோபாய திட்டத்தின் முதற் கட்டமாகவே இவ்விரு வாகனங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
04 கியூப் அளவு கொண்ட இந்த ஒரு டம்ப் ட்ரக் லொறியில் ஒரு தடவையில் எட்டு தொண் குப்பைகளை சேகரிக்க முடியும் எனவும் இவை நீண்ட தூரம் சென்று குப்பைகளை கொட்டுவதற்கேற்ற வலுவைக் கொண்டவை எனவும் இதனால் செலவு மற்றும் நேர விரயங்களை குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நாளாந்தம் 80 தொண் குப்பைகள் சேர்வதாகவும் அவற்றுள் 50 வீதமான குப்பைகளையே மாநகர சபையினால் தினசரி சேகரித்து அகற்ற முடியுமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் ஏ.எம்.றகீப், வாகன மற்றும் ஆளணிப் பற்றாக்குறையும் கல்முனையில் குப்பை கொட்டுவதற்கான இடமொன்று இல்லாதிருப்பதால் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சென்று அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காட்டில் அவற்றை கொட்ட வேண்டியிருப்பதாலுமே திண்மக்கழிவகற்றல் சேவையை சிறப்பாக முன்னெடுப்பதில் பெரும் சவாலை எதிர்நோக்க நேரிடுகிறது என்று குறிப்பிட்டார்.
புதிதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படும்போது இப்பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment