போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் வேண்டும்
( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க எதிர்காலத்தில் பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்த வேண்டிய கட்டம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
இவ்வாறு சாய்ந்தமருது – மாளிகைக்காடு உலமா சபை சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று ( 25 ) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய கல்முனை பொலிஸ் நிலைய சமூக சேவை பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹித் தெரித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
அண்மைக்காலமாக கல்முனை பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் பலரை கைது செய்து நீதி மன்றத்தில் ஒப்படைத்து தண்டனைகள் பெற்றுக் கொடுத்தும் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை வேண்டி நின்ற போதும் அச்சத்தின் காரணமாக அவர்களை காட்டிக் கொடுப்பதில் பொதுமக்கள் பின்நிற்கின்றார்கள்.
போதனைப் பொருள் பாவனையில் பாடசாலை மாணவர்கள் , இளைஞர்கள் , மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பலர் ஈடுபட்டுவருவது அண்மைக்கால விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
போதைப் பொருள் கல்முனைப் பிரதேசத்திற்கு கொண்டுவரப்படுவதற்கு காரணமாக அமைபவர்களை அடையாளம் காண்பதற்கான கல்முனை பொலிஸ் நிலையத்தால் விசேட பொலிஸ் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டைய காலகட்டத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையுடன் இணைந்து போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட குழுவொன்றை அமைத்து நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போது போதைப் பொருள் பாவனை சற்று குறைவடைந்திருந்தது. இருந்தும் தற்போது போதைப் பொருள் பாவனை மீண்டும் அதிகரித்திருப்பது தற்போது கண்கூடாகக் காணக்கூடியதாகவுள்ளது.
சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள அமைப்புளினாலும் பள்ளிவாசல் நிர்வாகத்தாலும் இப் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த முடியாத சந்தர்ப்பத்தில் தான் இறுதியாக பொலிஸார் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த நிலையில் பொலிஸார் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சட்ட திட்டங்களுக்கு அமைவாகத்தான் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி வரும். பொலிஸார் இடையிடையே சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றோம். தினசரி ஒருவராவது பொலிஸாரால் இவ்வாறாக கைது செய்யப்படுகின்றார்.இருந்தும் அதன் பாவனை குறைந்தவாறில்லை. அதனால் நாங்கள் புதிதாக ஒரு அமைப்பினை உருவாக்கியுள்ளோம். இது பொதுமக்களுக்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். இப்போது இப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையாளர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை திரட்டி வருகின்றோம். எவர் எவர் இதில் சம்பந்தப்படுகின்றார்கள் .இவர்களுக்கு இப்போதைப் பொருள்களை யார் வினியோகிக்கின்றார்கள்.எந்த நேரத்தில் இந்த வியாபாரம் நடைபெறுகின்றது.என்பதனை அறிந்த பின்னர் பொலிஸ் மோப்ப நாய்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட வீடுகளை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இந்த சோதனை நடவடிக்கையின் போது வீட்டிலிருக்கும் பெண்களுக்கு பல வழிகளிலும் அசௌகரியம் ஏற்படக் கூடும். எனவே இந்த விடயத்தில் எந்தக் காரணம் கொண்டும் பொலிஸாரை எவரும் குற்றம் கூறக் கூடாது.
போதைப்பொருள் பாவனை சம்பந்தமாகவும் விற்பனை செய்வோர் சம்பந்தமாகவும் சரியான நேரத்தில் பொதுமக்கள் தகவல் வழங்கினால் மாத்திரமே இதனை கட்டுப்படுத்த முடியும்.என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment