"மலரும் கிழக்கு" அம்பாறையில் கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி
கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டிலான கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி இம்முறை அம்பாறையில் இடம்பெறவுள்ளது,
மலரும் கிழக்கு எனும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ள இந்தக் கண்காட்சி நாளை ஞாயிற்றுக் கிழமை ( 10 ) ஆம் திகதி அம்பாறையில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது,
இந்த கைத்தொழில் வர்த்தகக் கண்காட்சி 10,11 மற்றும் 12 ஆகிய மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது,
இதற்கு முன்னர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது,
கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமரின் 2025 ஆம் ஆண்டுக்கான அடைவு இலக்கினை அடைவதற்கான பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கும் விதத்தில் இந்தக் கண்காட்சியின் உள்ளடக்கங்கள் அமையப் பெற்றுள்ளது
கிழக்கு மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பினை அதிகரித்தல் வர்த்தக மற்றும் கைத்தொழில் கண்காட்சியின் பிரதான நோக்காக அமைந்துள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் விடுத்த அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாகம மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு இந்த வர்த்தக கண்காட்சியை நாளை ஆரம்பித்து வைக்கவுள்ளனர் .
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் ,கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி,சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் ,வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவாதி கலப்பதி , கிழக்கு மாகாண சபை தவிசாளர் எ.பீ.சந்திரதாஸ கலப்பதி ஆகியோர் விசேட அதிதிகளாகவும் , பிரதி அமைச்சர்களான எச்.எம்.ஹரீஸ் ,பைசல் காசிம் , அனோமா கமகே உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் ,பிரதம செயலாளர் உட்பட கிழக்கு மாகாண திணைக்கள தலைவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்
Comments
Post a Comment