நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற சௌந்தரராஜா பாலுராஜ்
தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்று கல்முனை சேனைக்குடியிருப்பை சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.
இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முறையாக நடைபெற்ற 4ஆவது தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (05) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
இதில் ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவில் காட்டா(Kata) போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் சௌந்தரராஜா பாலுராஜ் தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக 2014ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே தோ சம்பின்ஷிப்பில் அவர் தங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கறுப்புப் பட்டியைக் கொண்டவரும் (Internatinal Black Belt 5th dann), வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிய நடுவராக தெரிவாகியுள்ளவருமான (Sensei) எஸ்.முருகேந்திரனின் கீழ் பாலுராஜ் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை – சேனைக்குடியிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட சௌந்தரராஜா பாலுராஜ், சிறுவயது முதலே கராத்தே விளையாட்டில் அதிக ஆர்வமுடையவராக காணப்பட்டார். தனது சகோதரனான முருகேந்திரனின் வழிகாட்டலுடன் கராத்தே பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்த அவர், கல்முனை கார்மெல் பற்றிமா கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை மேற்கொண்டவராகும்.
அத்துடன், பாடசாலைக் காலத்தில் கராத்தே விளையாட்டில் அதிக திறமைகளை வெளிப்படுத்திய பாலுராஜ், மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், 2013 முதல் 2016 வரை நடைபெற்ற அனைத்து தேசிய விளையாட்டு விழாக்களின் கராத்தே தோ போட்டியின் சிரேஷ்ட பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்று தேசிய சம்பியனாகவும் அவர் முடிசூடியுள்ளார்.
இதேவேளை, 2013ஆம் ஆண்டு டுபாய் மற்றும் 2015ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட பாலுராஜ், கடந்த ஜுலை மாதம் கஸகஸ்தானில் நடைபெற்ற ஆசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் முதல் சுற்றில் வெற்றியைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் விளையாட்டில் பின்தங்கிய மாவட்டமாக விளங்குகின்ற கிழக்கு மாகாணத்தில் இலங்கையில் பெரிதும் பேசப்படாத, பிரபல்யமில்லாத கராத்தே விளையாட்டில் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வெற்றிகளையும் பெற்றுக்கொண்டுள்ள பாலுராஜ் போன்ற வீரர்களை ஊக்கப்படுத்துவதும், நாட்டிற்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அவருக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுப்பதும் இந்நாட்டின் விளையாட்டுத்துறையில் முக்கிய பதவிகளில் உள்ளவர்களின் தலையாய கடமையாகும்.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த 179 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்ட இம்முறைப் போட்டித் தொடரில் 30 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா முதலிடத்தையும், 21 தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை 2ஆவது இடத்தையும், 6 தங்கங்களை வென்ற பாகிஸ்தான் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.
Comments
Post a Comment