அமைச்சரவையின் அறிக்கை

சமகால அரசாங்கம் முனைப்புடன் கட்டியெழுப்பும் சமூகத்தில் சமூக இன மற்றும் மதவெறுப்புக்கள், வன்முறைகள் மற்றும் தண்டனைக்குரிய செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையின் கீழ் செயற்படும் தேசிய ஒற்றுமை அரசாங்கமானது கடந்த 2015 அம் ஆண்டு ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட ஆணைகளுக்கு இணங்கஇ எமது நாடு மீண்டும் கடந்தகால மோதல் நிலைமைகளுக்கு திரும்பாதிருப்பதை உறுதி செய்தல், நல்லிணக்கம், நிலையான சமாதானம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நோக்கி எமது தேசத்தை வழிநடத்தல் என்பவற்றில் மிக உறுதியாக உள்ளது.
அமைச்சரவை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இந்த அறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மைக்காலமாக இஸ்லாமிய வர்த்தக நிலையங்கள், வீடுகள், இஸ்லாமிய மத வழிபாட்டு ஸ்தலங்கள் போன்றவற்றைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து நாம் மிகவும் மனம் வருந்துகிறோம். வன்முறையை ஏற்படுத்தும் வகையில் தனிநபர்கள் மற்றும் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் அருவருக்கத்தக்க பேச்சுக்கள் உள்ளிட்ட சம்பவங்களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
இத்தகைய சம்பவங்களினால் இடம்பெற்ற வாழ்வாதார இழப்புக்கள் மற்றும் சொத்து சேதம் தொடர்பாகவும், குறிப்பாக தனிநபர்கள் மற்றும் முஸ்லீம் சமூகத்தினரிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள மன வலி, பீதி தொடர்பாகவும் நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம்.
வன்முறைகளை தூண்டுதல் மற்றும் இழிவுபடுத்தல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தனிநபர்கள் மற்றும் குழுக்களின் அருவருக்கத்தக்க உணர்வுகள் மற்றும் செயற்பாடுகள் ஆகியன இலங்கை சமூகத்தின் பல்லின இன, மத பின்னணிகளுக்கு எதிரானவை என்பதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.
நல்லிணக்கம், சமாதான இருப்பு, சட்ட விதிமுறைகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் உடன்பாட்டினை மீள் உறுதி செய்வதோடு, முஸ்லீம் சமூகத்தினர், ஏனைய மதங்கள் மற்றும் நாட்டின் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களை இலக்காக வைத்து மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை தூண்டுபவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டத்திற்கு ஏற்ப, உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குகிறோம்.
வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறையை தூண்டும் அனைத்து தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக சட்டத்திற்கேற்ப, எவ்வித கால தாமதமுமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இத்தகைய சம்பவங்களின் போது குற்றவாளிகளின் சமூக அந்தஸ்து, இன அல்லது மதப் பின்னணி அல்லது அரசியல் சார்புகள் எவற்றையும் கருதாது என எவ்வித பாரபட்சமுமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வன்முறை சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை விரைவாக்குமாறு சட்ட அமுலாக்க அதிகாரிகள் மற்றும் கௌரவ சட்ட மன்ற அதிபர் ஆகியோருக்கு பணிப்புரை வழங்குகிறோம்.
எமது நாட்டினுள் இத்தகைய வெறுப்பினை பரப்பிவரும் நபர்களுக்கு எதிராக செயற்பட்டு இந்நிலைமையில் அமைதி மற்றும் நிலையான சமாதானத்திற்கு அழைப்பு விடுத்து வரும் சிவில் சமூகத்தினர் மற்றும் மதத் தலைவர்களுக்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது நாட்டில் நல்லிணக்கம், சமாதான சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்துதலை நோக்காகக் கொண்ட முயற்சிகளில் இலங்கையர் அனைவரும் தங்கள் மற்றும் செயற்தகு பங்குபற்றலையும், தலைமைத்துவத்தையும் வலியுறுத்துவதற்கான வாய்ப்பாக இதைக் கருதுகிறோம்.
கௌதமபுத்தரின் போதனைகள் ஒற்றுமை, சகிப்புத்தன்மை, மரியாதை மற்றும் இரக்கம் என்பவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. 'வெறுப்பு ஒரு போதும் வெறுப்பைத் தடுக்காது வெறுப்பு அன்பினால் நீங்குகிறது' என்பது கௌதம புத்தரின் புகழும் கெளரவமும் நிறைந்த வார்த்தைகளாகும், அத்துடன் இது எல்லோருக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு நித்தியசட்டமாகும். இந்நாடானது உலகில் சிறந்த மதங்களால் ஆசிர்வாதிக்கப்பட்டநாடாகும். பெளத்தம் ,இந்து , கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என்னும் சிறப்பு வாய்ந்த மதங்கள், சமாதான ஒத்துழைப்பிற்கு தேவையான வழிகாட்டுதல், மனித மதிப்புகளை நிலைநிறுத்துதல் , நேர்மை மற்றும் கடின உழைப்பு என்பவற்றை வழங்குகின்றன.எனவே, இப்பிராந்தியத்தில் இலங்கை தலைசிறந்த நாடாக மீள்கட்டியெழுபப்படும்.
நிலையான சமாதானம், முன்னேற்றம், ஒவ்வொருநபரினதும் மரியாதையை உறுதிப்படுத்தல், பன்முகத்தன்மையை மதித்தல் உட்பட சம குடியுரிமையின் உரிமைகளான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பை ஒவ்வொரு தனிநபருக்கும் வழங்குதல் ஆகியவற்றை கட்டியெழுப்புவதற்காக தங்களது பங்களிப்பை வழங்குமாறு இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் என இத்தேசத்தின் அனைத்து குடிமக்களையும் நாம் வலியுறுத்துகிறோம்.
ஒவ்வொரு தனிநபருக்குமிடைய முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய வன்முறைகளை குறைத்தல் மற்றும் கடந்த காலத்தை போன்று இன வன்முறையை தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ இடம்பெற எம்மை அனுமதிக்காமை போன்றவற்றிற்கு ஆதரவாக நாம் அனைவரும் கட்டாயமாக ஒன்றுபட்டு நிற்போமாக.

அமைச்சரவை
கொழும்பு 2017 ஜுன் 14

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்