கல்விச் சமூகம் போற்றும் அதிபராக திகழ்ந்து ஓய்வு பெறும் திருமதி எஸ்தர் தவராஜா
பாடசாலையில் மனையியல் ஆசிரியராக பிரவேசித்து தன்னை கல்வி சமூகத்துடன் திருமதி எஸ்தர் தவராஜா அவர்கள் பகுதித் தலைவராக,பிரதி அதிபராக ,அதிபராக தமது இருப்பை நிலை நிறுத்தி ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ,பழைய மாணவர்கள் ,ஊர்மக்கள் போன்றோரின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இப்பெருந்தகை பலராலும் பாராட்டத்தக்க வகையில் சேவையாற்றி தனது 38 வருட கல்விச் சேவையை பூர்த்தி செய்து 20.05.2017 அன்று ஓய்வு பெறுகின்றார்.
இவரது வாழ்க்கை தடங்களை சற்று மீட்டிப் பார்போமாயின் வத்தலோமியுஸ் நாகரத்தினம் தம்பதியினருக்கு ஆறாவது புதல்வியாக 1957.05.20 இல் கோமாரியில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை கோமாரி மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும் ,உயர் கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் பயின்றார். 1978.10.12 அன்று ஆசிரியையாக அம்பாறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கடமையைப் பொறுப்பேற்றார் . தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் மனையியல் பாடநெறியில் பயிற்சி பெற்று 1983.12.17ஆம் திகதி கல்முனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து பல பாடசாலைகளில் கடமையாற்றி இறுதியாக கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் 10.02.2006 தொடக்கம் 19.05.2017 வரை அதிபராக பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தன சேவைக்காலத்தில் கடமையே கண்ணாகக் கொண்டு கடமையாற்றி சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க வழிகாட்டியாயமைந்தார். சிறந்த அறிவும் ஆளுமையும் மிக்கவராகவும் மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற வாண்மையுடன் ,அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அத்தகைய பெறுபேறுகளையும் எடுத்து எல்லோராலும் பாராட்டப் பட்டவராக வாழ்ந்தார்.
இவர் இரக்க குணம் ,ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மை இவரிடம் இருக்கும் இயல்பான குணங்களாகும் ."மேடம்" என அன்போடு பணிவாக அழைக்கும் குரல் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கும். அந்தளவுக்கு தனது கடமையை மதித்துப் பணிசெய்த பெருந்தகை . இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் தனது ஆற்றலினால் சிறந்த ஒரு மாணவ சமுதாயத்தை உருவாக்கிய உத்தமியாவர் . ஆசிரியர்களிடத்தில் நடப்புறவுடன் வாழ்ந்து வந்தவர். மாணவர் மனதில் தனெக்கென ஒரு தடத்தைப் பதித்தவர். எல்லோரும் பிடித்து இழுத்தால்தான் தேர் உருளும் அதுபோல பாடசாலையிலும் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயற்பட வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட வழிகாட்டி .சிறந்ததொரு இல்லத்தரசி சிறந்த ஆலோசகருக்கான ஒரு முன்மாதிரி .
இவருடைய குணங்களான கடமையுணர்ச்சி ,நேர்மை ,தொழில் பக்தி ,சேவை மனப்பான்மை என்பவற்றுக்கு அப்பால் அன்பு உள்ளன கொண்டவராக இருந்து பெண்களின் தலைமைத்துவ பண்புக்கு பெருமை சேர்த்தவர் என்பது நிதர்சனமானதாகும்.
இவரது சேவை அளவிட முடியாதது என்றே கூறலாம் கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலய கல்வி சமூகமும் இவரது கல்விப்பணிக்கான அர்ப்பணிப்பு சேவைக்கு வாழ்த்தி கெளரவிக்கின்றது. இன்று 19 இவருக்கான பாராட்டு வைபவமும் நடை பெறுகிறது.
Comments
Post a Comment