சு.க. மட்டு மாவட்ட புதிய அமைப்பாளர் சுபைருக்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நோக்குடன் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிப் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் காத்திரமான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 7 புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் துடிப்பான இளம் அரசியல் வாதியான எம்.எஸ்.சுபைர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமையான கட்சிக்கு பல நன்மைகளை ஈட்டித்தரும்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக சில கசப்பான சம்பவங்கள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு சிறுபான்மை சமூகம் தூரமானது. ஆனால், இன்று அந்நிலை மாறி வருகின்றமை அவதானிக்க முடிகின்றது. கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புக்களுக்கு சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளுக்கும் புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கைகளை கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடன் கலந்துரையாடி மேற்கொண்டு வருவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Comments
Post a Comment