மருதமுனையில் ஆட்டு இறைச்சியுடன் நாய் இறைச்சி விற்பனை என்பது உண்மைக்குப் புறம்பான செய்தி
(யு.எம்.இஸ்ஹாக்)
மருதமுனையில் கடந்த சித்திரைப் புத்தான்டு தினத்தன்று ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியும் கலந்து விற்பனை செய்யப்பட்டதென முகநூலில் வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என நேற்று மருதமுனையில் நடை பெற்ற வழிபாட்டுத் தலங்களின் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக தமிழ் மக்கள் மத்தியிலும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் அச்சம் நிலவி வந்தது. இவ்விடயம் தொடர்பாக பல்வேறு கோணத்தில் மருதமுனை புத்தி ஜீவிகளால் மிக அழமாக ஆராயப் பட்டு நேற்று இறுதி முடிவெடுக்கப் பட்டது.
இதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த ஒன்று கூடல் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல் அலுவலகத்தில் இடம் பெற்றன.
அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.சக்காப் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்லாறு , பெரிய நீலாவணை, துறை நீலாவணை , பாண்டிருப்பு , கல்முனை , காரைதீவூ கிராமங்களின் ஆலய தலைவர்களும் , மருதமுனை ஜம்இயத்துல் உலமா தலைவர் உட்பட மருதமுனையை சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணிகள் கல்முனை மாநகர ஆணையாளர் , பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர் சபை தலைவர்கள், ஆட்டிறைச்சி விற்பனை உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக முகநூலில் வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானவை என்றும் மருதமுனை கிராமத்தின் பொருளாதாரத்தை சீரழிக்கும் நோக்கிலும் வெளியிடப்பட்ட தகவலாகும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டு அச்சமின்றி ஆட்டிறைச்சி கொள்வனவு செய்ய முடியும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.
இந்தக் கூட்டத்தில் சிபான் மற்றும் முபஸ்ரின் ஆகிய இருவரும் இந்த செய்தியின் மூலம் யார் அதனை வெளியிட்டவர் என்ற விபரத்தை அங்கு கூடி இருந்த சபயினருக்கு இணையத்தளம் வாயிலாக நிருபித்துக் காட்டினார்கள் .
Comments
Post a Comment