வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய செயல் வீரன் பிரதி அமைச்சர் ஹரீஸ் !!
கல்முனை றோயல் வித்தியாலயத்தில் கடந்த வருடம் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் 'றோயலின் புலமைத்தளிர்கள்' நிகழ்வு சனிக்கிழமை (20) ஆசாத் பிளாஷாவில் இடம்பெற்றது.
றோயல் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எம்.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
இதில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத், கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளர் எல்.ரீ.சாலித்தீன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.ரஹீம் உள்ளிட்ட கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை றோயல் வித்தியாலயத்தினை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட தொகுதியில் பிரதி அமைச்சர் ஹரீஸினால் 2012ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பாடசாலை ஆரம்ப நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹரீஸ், இப்பாடசாலையிலிருந்து 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபா பணப் பரிசு பகிர்ந்தளிக்கப்படும்; என வாக்குறுதியளித்திருந்தார்.
இதற்கமைவாக 2015ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இப்பாடசாலை மாணவர்கள் மூவருக்கும் இந்நிதியினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பகிர்ந்தளித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்து இவ்வாக்குறுதியினை இந்நிகழ்வில் வைத்து நிறைவேற்றினார்.
இந்நிகழ்வில் இப்பாடசாலையின் ஸ்தாபகரும், இதன் அபிவிருத்தியில் முழுக்கவனமெடுத்து வரும் பிரதி அமைச்சர் ஹரீஸ் பாடசாலை சமூகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் உரையாற்றும் போது, எதிர்காலத்தில் இப்பாடசாலையிலிருந்து 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு மடி கணனி வழங்கப்படும் என மீண்டும் ஒரு வாக்குறுதியினை வழங்கியதுடன் இப்பாடசாலையை சகல வசதிகளும் கொண்ட ஒரு தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதே எனது ஆசையாகும் என தெரிவித்தார்.
Comments
Post a Comment