கல்முனையில் நாளை....தேசிய உடல் ஆரோக்கிய வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் இறுதித் தினமான நாளை (30) சனிக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனையில் பிரமாண்டமான முறையில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் காலை முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகம், அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான விளையாட்டு மற்றும் உடல் ஆராக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விஷேட விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளும் உடல் ஆரோக்கிய நிகழ்வுகளும் கடந்த 5 நாட்களாக வௌ;வேறு தொனிப்பொருளில் இடம்பெற்றன.
விளையாட்டு மற்றும் உடல் ஆராக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வழிகாட்டலின் கீழ் நாளை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச செயலகங்கள் ஊடாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகம், கல்முனை தமிழ் பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை பொலிஸ் நிலையம், பாதுகாப்பு படையினர், கடற் படையினர், பாடசாலை சமூகம் மற்றும் ஏனைய திணைக்களங்கள், விளையாட்டுக்கழங்கள், விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்த இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்துள்ளனர்.
காலை 7.00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவுள்ளது. இதில் முதல் நிகழ்வாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடை பவணி இடம்பெறவுள்ளது. இதில் பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், மூன்று பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், பாடசாலை மாணவர்கள், விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நடை பவணி சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்தின் முன்பாக ஆரம்பமாகவுள்ளது.
இந்நடை பவணியில் கலந்து கொள்ளவதற்கு இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மரதன் ஒட்டம் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு நீலாவணை விஷ்னு வித்தியாலயத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கல்முனை பிரதான வீதி வழியாக சாய்ந்தமருதை வந்தடையவுள்ளது. இந்நிகழ்வினை பிரதி அமைசர் ஹரீஸ் ஆரம்பித்து வைப்பார். இதனை அடுத்து கிரிக்கெட் சுற்று போட்டி சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
மாலை நேர நிகழ்வுகள் பிற்பகல் 3.00 மணிக்கு கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வீரர்களை கொண்டு ஒரு கண்காட்சி உதைபந்தாட்ட போட்டி இடம்பெறவுள்ளது. அத்துடன் 40 வயதுக்கு கீழ்பட்ட மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளும் இடம்பெறவுள்ளதுடன் கராத்தே போட்டியும் இடம்பெறவுள்ளது.
இறுதியாக போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றி வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைக்கவுள்ளார்.
Comments
Post a Comment