150 தொழிற்சங்கங்கள் நாளை அடையாள வேலை நிறுத்தம்
வரவு- செலவு திட்டத்தை எதிர்த்து 150 தொழிற்சங்கங்கள் நாளை (15) நாடு தழுவிய அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளன. அரச, தனியார் மற்றும் அரச சார் துறைகளைச் சேர்ந்த மேற்படி தொழிற்சங்கங்களே நாளை வேலை நிறுத்தம் செய்யவுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் சந்திப்பு சாதகமாக முடிவடையாததையடுத்தே ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் குதிக்கவிருப்பதாக தொழிற்சங்கங்களின் இணை ஏற்பாட்டாளர் சமன் ரத்ன பிரிய நேற்று தெரிவித்தார்.
இதனடிப்படையில், சுகாதாரத்துறை, தபால், அரச மற்றும் தனியார் வங்கிகள், அரச அச்சகம், அரசாங்க தொழிற்சாலைகள் என்பன நாளை (15)காலை 7 மணி முதல் வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளன. இதேவேளை, ரயில் மற்றும் தனியார் பஸ் சேவைகள் இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் தமது பணி பகிஷ்கரிப்பை முன்னெடுக்க இருப்பதாகவும் சமன ரத்னபிரிய கூறினார்.
அரச, அரச சார்பு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகள். கடந்த சனிக்கிழமை (12) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் நிதியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.
மேலதிக கொடுப்பனவான 10 ஆயிரம் ரூபாவை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தல், தனியார்துறை ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கல், முடக்கப்பட்டுள்ள அரச வங்கிகளின் வருமானம், ஓய்வூதியக்காரர்களின் அக்ரஹார, காப்புறுதி, ஆளணி உத்தியோகத்தர்கள் போன்ற விடயங்கள் இந்த சந்திப்பில் முக்கிய இடம் வகித்தன.
அரச, தனியார் மற்றும் அரசசார்பு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் முன்னர் அனுபவித்து வந்த பல சலுகைகளும் நிவாரணங்களும் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவு திட்டத்தில் முடக்கப்பட்டிருப்பதனால் ஊழியர்கள் பொது மக்களுக்கு சேவையாற்றுவதில் பாரிய அதிருப்தி நிலைக்கு உள்ளாகியிருப்பதாகவும் பிரதிநிதிகள், பிரதமர் தலைமையிலான குழுவினருக்கு சுட்டிக்காட்டினர். எவ்வாறானபோதும் அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் எந்தவொரு சாதகமான தீர்மானத்திற்கோ அல்லது உடன்படிக்கைக்கோ அன்றைய தினம் முன்வரவில்லை.
இது தமக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதனால் ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி நாளை வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கும் தீர்மானத்தில் உறுதியாகவிருப்பதாக அனைத்து தொழிற்சங்கங்களினதும் இணை ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய கூறினார்.
எமது அடையாள வேலை நிறுத்தத்திற்கும் அரசாங்கம் செவிசாய்க்காவிடின், இவ்வாரத்திற்குள் மேலும் இரண்டு தினங்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் களமிறங்க தொழிற்சங்கங்கள் ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அடையாள வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துவதாக குறிப்பிட்ட ரத்னப்பிரிய, பொதுமக்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டுமென்றும் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட யோசனை நவம்பர் 20 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டது. அதற்கு முன்னரே பிரதமர் விக்கிரமசிங்க அதன் சாரம்சம் அடங்கிய உரையினை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
இதில் சில விடயங்கள் தமக்கு அசாதாரணமாக இருப்பதாக குறிப்பிட்டு அதிருப்தி வெளியிட்ட தொழிற்சங்கங்கள் இது குறித்து பல்வேறு வழிகளில் கோரிக்கைகளை முன்வைத்து வந்தது. ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தி வந்த 18 தொழிற்சங்கங்கள் சாதகமான பதில் கிடைக்காதவிடத்து டிசம்பர் 15 ஆம் திகதியன்று வேலை நிறுத்தம் மேற்கொள்வதாக தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
Comments
Post a Comment