தேசிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் கட்சியின் தலைவரான ஜனாதிபதியிடம்
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்றல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விடயங்களில் முடிவெடுக்கும் முழு அதிகாரம்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதியின் தலைமையில் கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் புதிய செயலாளராக துமிந்த திசாநாயக்க நியமிக்கப்பட்ட பின் நடைபெற்ற முதலாவது மத்திய குழுக் கூட்டம் இதுவாகும். அத்துடன் இந்தக் கூட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டிருந்த மத்திய குழு உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.
தேசிய அரசாங்கம் அமைத்தல், அதில் பெற்றுக்கொள்ள வேண்டிய அமைச்சுப் பொறுப்புகள், அவை வழங்கப்பட வேண்டிய நபர்கள், என்பன குறித்தும், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் குறித்தும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சுதந்திரக் கட்சி மத்திய குழுவினால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் முடிவை ஏகமனதாக ஏற்றுக் கொள்வதற்கும் சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
Comments
Post a Comment