சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஆவன செய்ய வேண்டும்
சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வேண்டுகோள்
(பி.எம்.எம்.ஏ.காதர்)
சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபைக்கு கல்முனைத் தொகுதி மக்கள் கூட்டு மொத்தமான அங்கீகாரத்தை வழங்கியிருப்பதால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஆவன செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியீட்டி மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்து சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.ஏ.ஜப்பார் பொதுச் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் கையொப்ப மிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
"இந்த நாட்டு மக்கள் நல்லாட்சியை விரும்பி அதனை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக தங்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றியிருப்பதையிட்டு நாமும் அகமகிழ்வுடன் உங்களை வாழ்த்திப் போற்றுகின்றோம்.
சர்வதேச கீர்த்திமிக்க உங்களது நல்லாட்சி சிறுபான்மையினரின் உரிமைகள் அபிலாஷைகளை உறுதி செய்து கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் மீது இருந்து வந்த பேரினவாத சக்திகளின் நெருக்குதல்கள் முற்றாக களையப்பட்டு முஸ்லிம்கள் சுதந்திரமாகவும் தன்மானத்துடனும் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று முழுமையாக நம்புகின்றோம்.
அதேவேளை 2015-08-09ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் கல்முனையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தங்களது உரையின்போது; அமையப்போகும் புதிய அரசாங்கத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்மொழியப்பட்டுள்ள சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான உள்ளூராட்சி சபை ஏற்படுத்தித் தரப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்க்கியமைக்காக இப்பிரதேச மக்கள் சார்பாக ஏலவே எமது மறுமலர்ச்சி மன்றம் தங்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தததை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்டுகின்றோம்.
உண்மையில் வாய்மை தவறாத உங்களது வாக்குறுதியை ஏற்று சாய்ந்தமருது மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை பெருவாரியாக ஆதரித்து ஆணை வழங்கியுள்ள அதேவேளை கல்முனை மாநகர சபைப் பகுதி மக்களும் அதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து கல்முனைத் தொகுதியில் பெருவெற்றிக்கு வழி வகுத்துள்ளனர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஆகையினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கல்முனை மாநகர சபை கலைக்கப்பட்டு அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ள சூழ்நிலையில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஆவன செய்யுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.
தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உள்ளூராட்சி அதிகாரத்தை மீளவும் ஏற்படுத்தித் தருமாறு சாய்ந்தமருது மக்கள் சார்பில் எமது மறுமலர்ச்சி மன்றம் அரசியல் தலைவர்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருவதுடன் அதற்காக பிரதேசத்திலுள்ள சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்த சம்மேளனத்தின் ஊடாக 2000 ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.
2001-2004 காலப் பகுதியில் தாங்கள் பிரதமராக பதவி வகித்த காலத்திலும் 2015 ஜனவரி 8 ஆம் திகதி நல்லாட்சி உதயத்துடன் தாங்கள் பிரதமராக பதவி ஏற்ற பின்னரும் நேரடியாகவும் கடிதங்கள் மூலமும் இக்கோரிக்கையை வலியுறுத்தி வருவதை இந்த சந்தர்ப்பத்தில் தங்களுக்கு ஞாபகமூட்டுகின்றோம்.
ஐ.தே.க. பொதுச் செயலாளர்இ அமைச்சர் கபீர் ஹாஷிம் அவர்களையும் இது தொடர்பில் நேரடியாக சந்தித்து உரையாடியிருந்தோம். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ முன்னாள் உள்ளூராட்சிஇ மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜெயசூரிய ஆகியோரிடமும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை எமது நீண்ட கால அழுத்தங்களின் பயனாக சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம்இ அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அனுசரணையுடன் உள்ளூராட்சிஇ மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜெயசூரியவை சந்தித்து பேசியதன் பயனாக அவர் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததுடன் வர்த்தமானி அறிவித்தளுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார் என்பதையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
எனவே எமது மக்களின் இழந்த உரிமையாகவும் நீண்ட காலத் தேவையாகவும் இருந்து வருகின்ற தனியான உள்ளூராட்சி சபையை தங்களது நல்லாட்சி நிறைவேற்றித் தரும் என திடமாக நம்புகின்றோம்" என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment