கொலை சூத்திரதாரியை கண்டுபிடிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: கூட்டமைப்பு எச்சரிக்கை

மண்டூரில் மதிதயன் என்ற அரச உத்தியோகத்தரை நவீனரக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொலையாளிகளை ஒரு வாரகாலத்திற்குள் கண்டுபிடிக்காவிட்டால், கிழக்கில் போராட்டங்களை நடாத்தப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மட்டக்களப்பில் அமைந்துள்ள  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் கூறுகையில், மண்டூரில் பட்டப்பகலில் அதிநவீன மைக்ரோரக கைத்துப்பாக்கியை பாவித்து அரச உத்தியோகத்தரான மதிதயன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவரின் கொலையானது கிழக்கு மாகாணத்தில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது எனவே சூத்திரதாரிகளை ஒரு வாரகாலத்திற்குள் பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடிக்கவேண்டும்.
ஒரு வாரகாலத்திற்குள் கொலையாளிகளை கண்டுபிடித்து கொலைக்கான காரணங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தாவிட்டால் கிழக்கில் உள்ள மக்களுடன் இணைந்து போராட்டங்களை நடாத்துவதற்கு நாங்கள் தயாராகிவருகின்றோம்.
இன்றைய தினம் போராட்டம் நடாத்துவதற்கு நாங்கள் தயாரான போதும்,பாதுகாப்பு தரப்பினருக்கு அவகாசத்தை வழங்கி ஒருவாரகாலத்திற்கு பின்னர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதாவது கொலையாளிகளை அரசாங்கம் கண்டுபிடிக்கின்றதா? அல்லது அதனை இழுத்தடிக்கின்றதா? அல்லது அக்கறையின்றி செயற்படுகின்றதா என்பதை கருத்தில்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் காலங்களில் செயற்படுமென தெரிவித்துள்ளனர்.
மதிதயனுக்கு ஒருவாரத்திற்குள் நீதி கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: பொன்.செல்வராசா
மண்டூரில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ச.மதிதயன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் கொலையாளிகள் ஒருவார காலத்துக்குள் கைதுசெய்யப்படாது விட்டால் மக்களுடன் இணைந்து வெகுஜன போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மண்டூர் படுகொலை தொடர்பிலும் அது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
சமூகசேவைகள் உத்தியோகத்தரின் படுகொலையினை கண்டித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு,நல்லாட்சி நிலவும் இந்தவேளையில் இவ்வாறான செயற்பாடுகள் மக்களை மாத்திரம் அன்றி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தனர்.
மக்கள் மத்தியில் இருக்கும் அச்ச நிலையினை போக்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளதாகவும் அவற்றினை அவர்கள் செய்வார்கள் என நம்புவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்