மியன்மார் பிக்குகளின் இரகசிய நிலையம் இலங்கையில்
கொழும்பு ஏழு பௌத்தலோக மாவத்தையில் தும்மூல சந்தியில் பௌத்தர்களின் பெரிய புத்த கலாசார நிலையம் ஒன்று உள்ளது. 2600 ஆம் ஆண்டை குறிக்கும் சம்புத்த ஜெயந்திய என்றழைக்கப்படும் ஒரு நிகழ்வை முன்னிட்டு பல மாடிகள் கொண்ட இப்பெரிய கட்டிடம் 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இதனை திறந்து வைத்தார்.
இந்த நிலையத்தின் உண்மைத் தன்மை பற்றி கடந்த வருடம் எனது புலனாய்வுக்கு எட்டிய தகவல்களை ஒரு பத்திரிகையாளரிடம் எடுத்து சொன்னேன். ஆனால் அவ்வேளை அது அவருக்கு ஒரு பாரதூரமாக விளங்கவில்லை. பின்னர்தான் அவர் நான் சொன்னதன் உண்மைத் தன்மையை எனக்கு சுட்டிக் காட்டினார். அதாவது அந்தக் கட்டிடம் ஒரு இராணுவ தளபதியால் நிர்வகிக்கப்படுகின்றது. அதில் வேலை செய்யும் பெரும்பான்மையானவர்கள் இராணுவ வீரர்கள். இதன் தலைமை நிர்வாகி கோதபாய ராஜபக்ச.
அங்கு நடைபெற்ற அரச நிகழ்ச்சிகளில் சிலதில் எனக்கும் கலந்துகொள்ளக் கிடைத்தது. அவ்வேளை நான் அங்கு அவதானித்த விடயம், அங்கு பல பிக்குகள் வருவார்கள், கலந்துரையாடல்களில் பங்கு பற்றுவர். அங்கு வருபவர்களில் அதிகமானவர்கள் பர்மாவை சேர்ந்த பிக்குகள். நான் அவர்களுடன் பேசியும் உள்ளேன். நான் வேலை செய்த காரியாலயமும் அதற்கு பக்கத்தில்தான் இருந்தது.
அந்த கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர்தான் இந்த பொதுபல சேனா ஆரம்பிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில்தான் அவர்களின் கூட்டங்கள் நடை பெற்றன. ஞானசார தேரர் இந்த நிலைய நிர்வாகத்தில் உள்ளார். அடிக்கடி அங்கு வருவார். சில பர்மாவை சேர்ந்த பல பிக்குமார்கள் இந்த கட்டடத்தில் வேலையும் செய்கின்றனர். முழுக்க முழுக்க பர்மாவை மையமாகவும் பொது பல சேனாவை ஆலோசனையாகவும் கொண்ட இந்த நிலையம் 2600 ஆம் ஆண்டு நெருங்கும் போது இலங்கை ஒரு பௌத்த புனித பூமியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இயங்குகின்றது.
அதேவேளை மாற்று சமூகம் நாட்டில் இருக்கக் கூடாது என்பதும் இவர்களது நோக்கமல்ல. இவர்களின் பயம் 2600 ஆம் ஆண்டை நெருங்கும் போது (இன்றுள்ள பௌத்தர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்) இது முஸ்லிம்களின் பூமியாக மாறிவிடும் என்பதே. முஸ்லிம்களின் அதிகரித்துவரும் விகிதாசாரமும் குறைந்து கொண்டு வரும் பௌத்த சமூகத்தின் சனத்தொகையுமே இவர்களின் இத்தகைய பயத்துக்கு காரணமாகும். இதனால்தான் முஸ்லிம்களை கட்டுப்படுத்தி அவர்களை நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்கின்றனர்.
இதனால்தான் இந்த நிலையத்தின் நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் ஞான சார தேரர் இந்த பொது பலசேனாவை கோட்டாவின் ஆதரவுடன் ஆரம்பித்தார். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இதன் பூரண ஆதரவை மறைமுகமாக முன்னாள் ஜனாதிபதிதான் வழங்கினார். ஆட்சி மாறியதால்தான் இந்த தகவலை வெளிபடையாக பகிர்ந்து கொள்ள முடிகின்றது. இது விடயத்தில் அவதானமாக நாம் செயற்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுவே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.(நன்றி- http://thesam.lk)
Comments
Post a Comment