கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஹாபீஸ் நசீரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நியமிப்பதற்கு எடுத்த முடிவு சரியானது-டாக்டர் என்.ஆரிப்
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஹாபீஸ் நசீரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நியமிப்பதற்கு எடுத்த முடிவு சரியானது என்றும் தீர்க்கமானதொரு முடிவென்றும் சாய்ந்தமருதை சேர்ந்த டாக்டர் என்.ஆரிப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .
அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கடந்த ஜனவரி 8ம் திகதி இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்ட, எதிர்பார்க்கப்படாத தேர்தல் முடிவினை அடுத்து ஏற்பட்ட மாற்றத்தினைத் தொடர்ந்து பல சபைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன, நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
அதிலொன்று தான் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம். ஜனாதிபதித் தேர்தல் வரை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும்;, முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்து வந்தன. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டிருந்த, கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்வது யார் என்ற இழுபறியில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி செய்வது என முடிவு காணப்பட்டது.
அத்தோடு இழுபறி நிலை முடிந்து விடவில்லை. முதலமைச்சர் பதவி எந்தக் கட்சிக்கு என்ற சர்ச்சை பல நாட்களாகத் தொடர்ந்து ஈற்றில் அது முஸ்லிம் காங்கிரசுக்கு எப்படியோ கிடைத்தது. அதன் பின்னர் தான் சுவாரசியமான விடயங்கள் இடம்பெற்றன. அதாவது, முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள்ளே யார் முதலமைச்சராவது என்ற சர்ச்சை என்பதை விடவும் போட்டியான நிலையொன்று ஏற்பட்டு அது கட்சியின் தலைமையை சங்கடத்துக்குள்ளாக்கும் நிலைக்கும் இட்டுச்சென்றது என்பது சகலரும் அறிந்த விடயமாகும்.
தனக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அந்தக் கட்சியின் சில மாகாண சபை உறுப்பினர்களால், வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுத்தப்பட்டன. சில பிரதேச மக்களும் இன்னாருக்குத் தான் முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். இவை எவற்றுக்கும் மசியாமல், அடிபணியாமல், கட்சித் தலைமையானது தீர்க்கமானதொரு முடிவுக்கு வரவேண்டியிருந்தது.
அந்த வகையில் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் சிறந்ததொரு முடிவை எடுத்திருப்பதாகவே அனுபவ ரீதியாக எண்ணத் தோன்றுகின்றது. எங்களது ஊரின் முக்கியமான பிரச்சினை ஒன்றுக்குத் தீர்வினைப் பெறும் நோக்குடன் நானும் சிலரும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களை நேற்று 18.02.2015 புதன்கிழமை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தோம். இதற்கு முன்னர், எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் நேரடியாக முதமைச்சரை கண்டதோ சந்தித்ததோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் எங்களை இயற்கையான இன்முகத்துடன் வரவேற்ற விதமே முதலமைச்சர் தெரிவு சரியானது என்பதை ஆரம்பத்திலேயே பறைசாற்றியது. அரசியல்வாதியாயினும் சரி, வேறு எந்த பதவிநிலை சார்ந்தோராயினும் சரி, பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்காவிட்டாலும் கூட தன்னை நாடி வருபவர்களை இயற்கையான இன்முகத்துடன் வரவேற்றாலே போதும். வந்தவர்களும் திருப்தியுடன் செல்வார்கள்.
பின்னர் எமது பிரச்சினையை அவர் செவிமடுத்த விதம், குறித்த அந்தப் பிரச்சினைக்குரிய தீர்வை அடைவதற்கு அவர் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் உண்மையில் அவரின் தெரிவு மிகச் சரியானது என்பதை மேலும் நியாயப்படுத்தியது. இதனை நான் முகஸ்துதிக்காக கூறுகிறேன் என்றால், என்னோடு வந்த அத்தனை பேரும் முகஸ்துதிக்காகக் கூறுவார்களா?
முதன் முதலாக சந்தித்த அந்த அனுபவத்திலேயே, அவரின் திறமை, ஆளுமை, தொடர்பாடல், நிருவாக செயற்திறன் என்பன அவரிடம் நிறையவே இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அவரின் காலப்பகுதியில் நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையும் எங்கள் எல்லோர் மனதிலும் பதிவாகியது.
ஒரேயொரு விடயம் மட்டும் சிறிது சங்கடத்தை எங்களுக்கு மட்டுமல்ல, முதலமைச்சருக்கும் கூட ஏற்படுத்தியிருக்கலாம். முதலமைச்சரைச் சந்திக்கச் செல்கின்ற பொதுமக்கள் பல்வேறு விதமான விடயங்களைப் பற்றியும் கதைப்பதற்காக செல்வார்கள். அப்போது அங்கே வேறு நபர்கள் இருந்தால், சில விடயங்களை வெளிப்படுத்துவதற்கு தயக்கம் காட்டலாம். குறிப்பாக ஏனைய அரசியல்வாதிகள் அங்கே பிரசன்னமாகியிருந்தால் மேலே நான் சொன்ன சங்கடங்கள் அதிகமாக ஏற்பட இடமிருக்கின்றது. சக அரசியல்வாதிகளை முதலமைச்சர், நீங்கள் வெளியே போங்கள் என்று சொல்லியனுப்ப முடியாது. குறித்த அரசியல்வாதிகள் தாங்களாகவே நிலைமையை உணர்ந்து, குறிப்பாக பொதுமக்களைச் சந்திக்கும் தினமான புதன்கிழமைகளில் முதலமைச்சர் அலுவலகத்தில் நந்தி மாதிரி ஒட்டிக் கொண்டிருப்பதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது என்று எங்களில் பலரும் அபிப்பிராயப்பட்டனர். என்று அவர் தெரிவித்தார்
Comments
Post a Comment