கல்முனை நகர அபிவிருத்தியில் மோசடியும் பண விரயமும் பற்றி இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு முறைப்பாடு
(பி.எம்.எம்.ஏ.காதர் - அப்துல் அஸீஸ்)
கல்முனை நகர அபிவிருத்தியில் மோசடியும்,பண விரயமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து இது தொடர்பில் பூரண விசாரணை நடாத்துமாறு தேசிய ஜனநாய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நேற்று (25-02-2015)முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில் தெரிவித்திருப்பதாவது :- நமது தாய் நாட்டில் ஊழலற்ற, நீதியான மற்றும் மக்கள் நலன் பேணும் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தற்போது எமது நாட்டு மக்கள் ஒன்றுபட்டு ஒரு ஆட்சியை ஏற்படுத்தியுள்ளனர் .
இந்த ஆட்சியில் மிகவும் நம்பிக்கைக்குரியதும் மனித உரிமைக்கான பாதுகாப்பாகவும் மக்கள் நமது நாட்டு நீதிமன்றங்களையும் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் மீதுமே பூரண நம்பிக்கை வைத்துள்ளனர் .
அந்த வகையில் நானும் சில விடயங்கள் தொடர்பில் தங்களுக்கு ஒரு முறைப்பாட்டை வழங்குவதன் மூலம் எமது மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று உறுதியாக நம்பகின்றேன்.
அந்த வகையில்
01. கல்முனை மாநகர பிரதேசத்தில் கடந்த சுனாமி அனர்த்தம் பாரிய வெளிநாட்டு உதவிகளை கொண்டுவந்தது. அவற்றில் பெரும்பாண்மையான நிதிகள் சில அதிகாரிகளினால் கோரப்பட்ட பாரியளவினாலான இலஞ்சத்தினை வழங்க முடியாத நிலையில் பல ஆயிரக்கணக்கான மில்லியன் ரூபா நிதி மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படாமலே திரும்பிச் சென்று விட்டதாக இன்றும் எமது மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகின்றது.அவைபற்றி இந்த ஆணைக்குழு கல்முனை மாநகர சபையிடம் ஒரு விரிவானதும் சுதந்திரமானதுமான விசாரணையொன்றை நடத்துவதன் மூலம் அறிந்து வெளிப்படுத்த வேண்டும்.
02. கல்முனை பொது மைதானம் மற்றும் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் யுத்தம் இடம்பெற்ற காலங்களில் எமது பிரதேசத்தில் இருந்த பலவீனமான நிர்வாக அமைப்பினை பாவித்து தனியாரால் முறையற்ற விதத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வடக்கிலும் கிழக்கிலும் யுத்த காலங்களில் இராணுவத்தினாலும் மற்றும் தனியாராலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரியவர்களிடம் கையளிக்கும் பணிகள் தற்போதைய அரசாங்கத்தால் இடம்பெற்று வருகின்றது. அதே சட்ட நியமங்களை பாவித்து முறையற்ற விதத்தில் கையகப்படுத்தப்பட்ட கல்முனை பொது விளையாட்டு மைதானம் மற்றும் கூட்டுறவுச்சங்கத்திற்கு சொந்தமான நிலங்கள் அதன் பதிவில் கூறப்பட்ட வகையில் சட்டப்படி மீட்டெடுக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட வேண்டும். இந்த நில மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். மீட்கப்பட்ட நிலங்கள் பொதுமக்கள் நலதிட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படவேண்டும்.
03. காலத்துக்குக் காலம் வெளிநாடு சென்ற கல்முனை மாநகர முதல்வர்கள் பல்வேறு நாடுகளுடன் கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பில் ஒப்பந்தங்களை செய்துள்ளதாகவும் அதனூடாக பாரிய வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கவுள்ளதாக மக்களை நம்பவைத்து வருகின்றனர் .
1. உண்மையில் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டனவா? இந்த உடன்படிக்கைகளின் தற்போதைய நிலை என்ன? எத்தனை ஒப்பந்தங்கள் இவ்வாறு செய்யப்பட்டுள்ளன?
2. குறிப்பிட்ட வெளிநாட்டுப்பயணங்களுக்கு கல்முனை மாநகர சபையின் பணம் பயன்படுத்தப்பட்டதா? என்பவை விசாரிக்கப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
04. கடந்த 13.06.2013 அன்று சுமார் 31.22 மில்லியன் ரூபா நிதியல் மகநெகும திட்டத்தின் கீழ் கல்முனைக்குடி சாஹிபு வீதி அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த வீதி அபிவிருத்திப் பணிகள் 31.06.2014 இல் நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை இப்பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன. பழுதடைந்த நிலையில் காணப்பட்டாலும் ஓரளவு பாவிக்க கூடிய நிலையில் இருந்த இந்த வீதி ஒப்பந்தக்காரர்களினால் சுமார் ஒரு அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு அங்கிருந்த மண்கள் வெறொரு இடத்திற்கு அகற்றப்பட்டுள்ளன.
தற்போது இந்த வீதி….
1. மக்கள் போக்குவரத்திற்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாத நிலையிலும்,
2. மழைகாலங்களில் வெள்ளம் தேங்கி நிற்கக்கூடிய நிலையிலும்,
3. பாடசாலை சிறுவா;கள் மற்றும் நோயாளர்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும் காணப்படுகின்றது.
நடைபெற்று முடிந்த ஆரம்ப வேலைகள் என்று கூறி சுமார் 11 மில்லியன் ரூபாய்கள் வரை ஒப்பந்தகாரர் களினால் பெறப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் அங்கு 11 மில்லியன் ரூபாக்களுக்கான எந்தவொரு வேலையையும் அவதானிக்க முடியவில்லை.
சில வேளை மீண்டும் இந்த வீதியின் வேலைகள் ஆரம்பிக்கப்படுகின்ற போது ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்ட ஆரம்ப வேலைகளை மீண்டும் செய்யக்கூடிய தேவை ஏற்படும் என்றே தெரிகின்றது.
அவ்வாறான ஒரு நிலையில் மீண்டும் ஏற்கெனவே செலவு செய்யப்பட்ட 11 மில்லியன் ரூபாய்களோ அல்லது அதைவிட அதிகமான ஒரு தொகையையோ அரசாங்கம் மேலதிகமாக செலவு செய்யவேண்டி ஏற்படலாம்.
அதுமட்டுமன்றி தற்போதைய நிலையில் மீண்டும் இந்த வீதி அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்படுகின்ற போது அதற்காக செலவு செய்யப்படவேண்டிய தொகை மேலும் பல மில்லியன்களாக அதிகரிக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. அபிவிருத்திக்காக நிதிகளைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கின்ற காலப்பகுதியில் அரச நிதி சில அதிகாரிகளினதும், ஒப்பந்தக்காரர் களினதும் பொறுப்பற்ற செயல்களினால் முறையாக அபிவிருத்திக்குப் பயன்படாமலும் வீண்விரயத்தையும் ஏற்படுத்தி வருவதை எந்த காரணம் கொண்டும் பொறுப்பு வாய்ந்த இலங்கைப் பிரஜையான என்னால் மட்டுமன்றி யாராலும் அனுமதிக்க முடியாமல் உள்ளது.
05. கடந்த 21.08.2014 அன்று கல்முனைக்குடி அலியார் வீதியின் அபிவிருத்தி வேலைகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பிப்பதாக கூறி பல்வேறு மட்ட அரசியல்வாதிகளின் படங்கள் அடங்கிய வெளிப்படுத்துகைப்பலகை நடப்பட்டது.
21.08.2014 தொடக்கம் 20.02.2015 வரையான சுமார் ஆறு மாதங்களுக்குள் செய்து முடிப்பதாக கூறி ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதி நிர்மாணப்பணிகளுக்காக சுமார் 63.70 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. தேர்தல் காலங்களில் இந்த அபிவிருத்திப்பணி ஒரு முக்கிய இடம் பெற்றிருந்தது. தற்போது நிறைவடைந்திருக்க வேண்டிய இந்த பணிக்கான எந்தவொரு முன்னெடுப்பும் இன்றுவரை எடுக்கப்படவில்லை.
இந்த வீதி அபிவிருத்திப்பணி தொடர்பில்
01. அரசியல்வாதிகள் பொதுமக்களை நம்பவைத்து ஏமாற்றியிருக்கின்றனர்
02. அதிகாரிகள் இந்த மோசடிக்கு துணைபுரிந்திருக்கின்றனர்
03. மக்களின் அடிப்படை விடயங்கள் தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் .
06. மேலே என்னால் இல04 மற்றும் இல05 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்ட இரண்டு வீதிகளின் அபிவிருத்தி விடயத்தில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட சுமார் 94.92 மில்லியன் ரூபா நிதி உரிய திட்டத்திற்குப் பயன்படுத்தப்படாமல் விடப்பட்டடிருக்கின்றன. மட்டுமன்றி குறிப்பிட்ட திட்டம் தொடர்பில் பாரிய நிதி விரயம் செய்யப்பட்டுள்ளது.
கௌரவ பணிப்பாளர் நாயகம் அவர்களே!
01. மேலே என்னால் செய்யப்பட்ட முறைப்பாட்டு இல 01, 02 மற்றும் 03 ஆகியவை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் ஒரு தனியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்
02. என்னால் செய்யப்பட்ட முறைப்பாட்டு இல 04 மற்றும் 05 ஆகியவை தொடர்பில் மேலும் ஒரு தனியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த வீதி அபிவிருத்திகள் வீதி அபிவிருத்தி அதிகார சபை யினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில்
01. செயலாளர் , வீதி அபிவிருத்தி அமைச்சு
02. தவிசாளர் , வீதி அபிவிருத்தி அதிகாரசபை
03. மாவட்ட பொறியியலாளா;. வீதி அபிவிருத்தி அதிகாரசபை, அக்கரைப்பற்று
04. பிராந்திய பொறியியலாளர் , வீதி அபிவிருத்தி அதிகாரசபை, கல்முனை
05. உப ஒப்பந்தக்காரர்- சாஹிபு வீதி, கல்முனை
06. உப ஒப்பந்தக்காரர்- அலியார் வீதி, கல்முனை
ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டும். இதன் மூலம்
01. இந்த வீதி அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதிக்கு நடந்தது என்ன?
02. இந்த வீதி அபிவிருத்தி தடைப்பட்டமைக்கான காரணம் என்ன?
03. இந்த வீதி அபிவிருத்தி தடைப்பட்டமை தொடர்பில் யாராவது பின்னணியில் உள்ளனரா?
04. குறிப்பிட்ட வீதி தடைப்பட்டமை தொடர்பில் ஏதாவது இலஞ்சம் மற்றும் நிதி மோசடிகள் இடம் பெற்றுள்ளதா? போன்றவை விசாரிக்கப்பட்டு தவறுகள் கண்டறியப்பட்டு பொது மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
05. இந்த விடயத்தில் யாராவது பின்னணியில் இருந்து செயற்பட்டிருந்தால் அவர்கள் பாரபட்சமின்றி சட்டப்படியான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
06. அதிகாரிகளின் தவறினால் இந்த அபிவிருத்தி தடைப்பட்டிருந்தால் குறிப்பிட்ட அதிகாரிகள் பாரபட்சமின்றி சட்டப்படியான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
07. ஒப்பந்தக்காரர்களின் தவறினால் இந்த அபிவிருத்தி தடைப்பட்டிருந்தால் குறிப்பிட்ட ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தம் அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதோடு எதிர் காலத்தில் அவர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதி அபிவிருத்தி ஒப்பந்தங்கள் எதுவும் வழங்கப்படப்படாமல் தடைசெய்யப்பட வேண்டும். அத்துடன் பாரபட்சமின்றி சட்டப்படியான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
08. வீதியின் தற்போதைய நிலையினால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பில் மக்கள் கருத்தறியப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒப்பந்தகாரர்கள் மற்றும் இந்த தவறுகளோடு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து நட்டஈடு பெறப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
09. மீண்டும் இந்த வீதியின் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட இந்த ஆணைக்குழு பரிந்துரை செய்ய வேண்டும். அத்தோடு அபிவிருத்தி என்ற போர்வையில் இடைநடுவில் விடப்பட்டுள்ள கல்முனைக்குடியின் ஏனைய வீதிகளின் அபிவிருத்தி தொடர்பில் இந்த ஆணைக்குழு ஒரு பொறிமுறையினை சிபார்சு செய்ய வேண்டும்.
மேற்படி விடயங்கள் பற்றிய விரிவான விசாரணை எமது நாட்டின் அபிவிருத்திக்கும் நல்லாட்சிக்கும் உறுதுணையாக அமையும் என பொது மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம் முறைப்பாட்டின் பிரதிகள் பின்வருவோருக்கும் அனுப்பிவைக்கப்படடுள்ளது.
01. அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர் கள்
02. மாண்புமிகு பிரதமா; ரணில் விக்கிரமசிங்க அவர் கள்
03. கௌரவ ரவூப் ஹகீம். பா.உ. தலைவர் , மு.கா. அமைச்சர் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல்
04. கௌரவ றிஸாட் பதியுதீன். பா.உ. தலைவர் , அ.இ.ம.கா. அமைச்சர் கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
05. கௌரவ னுச.ராஜித சேனாரத்ன. பா.உ. அமைச்சர் . சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய துறை
06. கௌரவ அநுரகுமார திஸாநாயக்க, பா.உ. தலைவர் , மக்கள் விடுதலை முன்னணி
07. கௌரவ ஹபீர் ஹாஸிம் பா.உ. அமைச்சா,உயா;கல்வி. பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு
08. கௌரவ எம்.ரீ.ஹஸன் அலி பா.உ. சுகாதார இராஜாங்க அமைச்சா;.
09. கௌரவ எச்.எம்.எம்.ஹரீஸ் பா.உ. கல்முனை
10. கௌரவ நிஸாம் காரியப்பா;. மாநகர முதல்வா; கல்முனை.
Comments
Post a Comment