மைத்திரிபால சிறிசேனவின் யஹ பாலனயில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பற பாலன!
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நடத்தப்பட்ட இந்த வருடத்தின் முதலாவது பாரிய நாடகம் மேடையேற்றப்பட்டது. அமைச்சர் ஹக்கீம் பிரதான பாத்திரம் ஏற்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜெமீல், அன்வர் ஆகியோர் துணை நடிகர்களாக அற்புதமாக நடித்திருந்தனர்.
மக்களோ பாவம்... பழைய படங்களில் எம்.ஜி. ஆருக்கு நம்பியார் ஒரு அடிவிட்டாலே (நடிப்புக்காக) உண்மை என நினைத்து கொதித்தெழும் ரசிகர்கள் நிலையில்தான் காணப்பட்டனர். ஹாபிஸ் நஸீருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதற்காகவும் அம்பாறை மாவட்டத்தைப் புறக்கணித்ததற்காகவும் ஜெமீலுக்கு அந்தப் பதவியை வழங்கவில்லை என்றும் கல்முனை மகக்ள் கொதிந்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் அமைச்சர் ஹக்கீமின் கொடும்பாவியையும் எரித்து நின்றனர்.
தாங்கள் அரகேற்றிய நாடகத்தை மக்கள் உண்மையாக நம்பி விட்டனர் என்ற கேலித்தனத்தில் இவர்கள் காணப்பட்டனர். ஆனால் மக்களோ உண்மையென நம்பியே அனைத்தையும் செய்து தங்களை வருத்தி, பிரிந்து கொண்டனர்.
இவர்கள் தங்களது நாடகத்துக்கு கௌரவ நடிகர்களாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எம். சுபைரையும் வலிந்து எடுத்துக் கொண்டனர்.
இந்த நாடகத்துக்கு திரைக்கதை வசனம் எழுதி தயாரித்த கல்முனையின் குறுநில மன்னர் தலைமறைவாகியிருந்தார். பாவம் இறுதியில் அனைத்துப் பழிகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான தவம் அவர்கள் தலையில் கட்ட வேண்டியதாகி விட்டது.
இவர்கள் ஆடிய நாடகத்தின் உண்மை நிலை இன்றைய ஊடகவியலாளர் மகாநாட்டில் அம்பலத்துக்கு வந்து விட்டது. ஜெமீல் மன்னிப்புக் கேட்டாராம். ஹக்கீம் மன்னித்து விட்டாராம்.. எவ்வளவு வெட்கம்.. இந்தப் போலி நாடகத்தின் உண்மையைத் தன்மையை இன்று அம்பலப்படுத்தாமல் கொஞ்சக் காலம் தாமதித்தாவது வெளிப்படுத்தியிருந்தால் முஸ்லிம் காங்கிரஸினால் பாவப்பட்டு போயுள்ள முஸ்லிம் மக்கள் சற்று மறந்த நிலையில் நிம்மதியடைந்திருப்பர். வெள்ளிக்கிழமை நாடகத்தையின் உண்மையை ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே அவர்கள் அரங்கேற்றி அசிங்கப்படுத்தி விட்டனர்.
பிரதேச வாதத்தையும் சமூகத்தில் பிரிவினையையும் ஏற்படுத்தி மக்களை பிரித்தவர்கள் இன்று சேர்ந்து விட்டனர். ஆனால் அவர்களை நம்பிய மக்களோ இன்று பிரிந்து நின்று மனக் கசப்புடன் காணப்படுகிறனர்.
கிழக்கு மகாண சபை உறுப்பினரான சர்ச்சைக்குரிய ஜெமீல் அவர்கள் பல தடவைகள் என்னுடன் நேற்று தொடர்பு கொண்டு பல விடயங்கைளத் தெரிவித்திருந்தார். அவற்றினை நான் நாகரிகமான முறையில் மறைத்துக் கொண்டேன். ஹாபிஸ் நஸீர் தொடர்பில் அவர் என்னிடம் தெரிவித்தவைகளை நான் இப்போது நினைத்துப் பார்க்கும் போது என்னுடன் நேற்று பேசியது இன்று அவருடன் இணைந்து கொண்ட ஜெமீலா என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது. அத்துடன் அமைச்சர் ஹக்கீம் தொடர்பிலும் அவர் சில கருத்துகளை என்னிடம் தெரிவித்தார். அதனைக் கூட ஜெமீல்தான் சொன்னாரா என்பதும் எனக்கு இன்னும் அதிர்ச்சியாக உள்ளது.
இறுதியாக ஜெமீல் மன்னிப்புக் கேட்டாராம் ஹக்கீம் மன்னித்து விட்டாராம். வெட்கம் வெட்கம்.. மக்களை இறைவன் மன்னித்துக் கொள்ளட்டும்! வாழ்க, வளர்க முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
Comments
Post a Comment