மருதமுனை மர்ஹூம் பளீல் மௌலானா இவ்வுலகை விட்டு பிரிந்து இன்று இரண்டு ஆண்டுகள்
பி.எம்.எம்.எ.காதர்)
மருதமுனையின் மூத்த கல்வியலாளர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மர்ஹூம் ஐ.எம்.எஸ்எம்.அபுல்கலாம் பளீல் மௌலானா அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து இன்று 2015-02-25ம் திகதி இரண்டு வருடங்கள் கடந்த விட்டன.
இவர் மறைந்தாலும் இவரின் சேவைகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவர் இன்று நம்மத்தியில் இல்லாவிட்டாலும் அவர்களின் நல்லறங்கள்,நற்பண்புகள்,சமூக சேவைகள் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.
கல்வி அதிகாரியாக இருந்து பதவியை அலங்கரிக்காமல் கல்வி வளர்ச்சிக்காக தன்னை அரப்பணித்தவர்.
நிமிர்ந்த நடை, கம்பீரத் தோற்றம்,முகம்மது அலி ஜின்னா, நேரு ஆகியோர் அணியும் தொப்பியுடன் கூடிய தோற்றம் இன்னும் கண்முன்னே காட்சியளிக்கின்றது. எடுத்த காரியத்தை துரிதமாகவும்,திறம்படவும் செய்து முடிக்கின்ற ஆற்றலை கொண்டவர்.
மருதமுனை மண்ணில் ஆண்மீகப் பணிபுரிந்த அக்காலத்தில் கொழும்பு மாநகரில் பெயர் பெற்ற மர்ஹூம் ஐதுரூஸ் மௌலானா- ஆயிஷா தம்பதியின் புதல்வர்களில் ஒருவராக 1920.12.31ம் திகதி மருதமுனையில் பிறந்தவர்தான் மர்ஹூம் ஐ.எம்.எஸ்எம்.பளீல் மௌலானா அவர்கள்.
இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் மாணவராவாராகக் கல்விகற்று 1950ம் ஆண்டு காலப்பகுதியில் அப்பாடசாலையிலேயே ஆசிரியராகவும்,தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி 1963ம் ஆண்டு காலப்பகுதியில் வட்டாரக் கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்று நாட்டின் பல பாகங்களிலும் கல்விப் பணியாற்றியுள்ளார்.
வளங்கள் மிகவும் குறைவாக இருந்த அக்காலத்தில் பாடசாலைகளுக்கு கால் நடையாகவும், துவிச்சக்கர வண்டியிலும் பயனித்து கல்வி கற்பித்து மாணவ சமூகத்திற்கு வழிகாட்டியாக இருந்து பல்துறை சார்ந்தவர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்.
கள்எலிய, மாவனல்ல, குருநாகல், பொலன்னறுவ, அநுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இவர் ஆற்றிய கல்விப் பணியையும், சமயப்பணியையும், சமூகப்பணியையும் இன்றும் மக்கள் நினைவுபடுத்திப் பேசுகின்றனர்.
தமிழிலும்,ஆங்கிலத்திலும் புலமை பெற்ற பளீல் மௌலானா சிறந்த பேச்சாளராகப் போற்றப்பட்டு ‘அபுல்கலாம்’பேச்சின் தந்தை என்ற பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.
1979ம் ஆண்டு காலப்பகுதில் மருதமுனை ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் (தற்போதய ஷம்ஸ் மத்திய கல்லூரி)முதல் அதிபராகப் பொறுப்பேற்று அப்பாடசாலை உயர்ச்சி பெற அடித்தளமிட்டார். இவர் 1981ம் ஆண்டு கல்வித்துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.
பின்னர் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக்கல்லூரி, அக்கரைப்பற்று மன்பூல் கைறாத் கல்லூரி ஆகியவற்றில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து சன்மார்க்க அறிவுத்துறைக்கு உரமூட்டியாகத் திகழ்ந்தார். அகில இலங்கை சமாதான நீதவானாக மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்.
1960ம் ஆண்டு தொடக்கம் 1979ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் தமிழ் முஸ்லிம் சமூகத்தை ஒன்றினைப்பதில் முன்னின்று செயற்பட்டவர்.
இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும், ஐக்கியத்தையும் கட்டியெழுப்புவதில் அக்றையாகச் செயற்பட்டவர். இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் ஸ்தாபக உறுப்பினராவார்.
மர்ஹூம் ஐ.எம்.எஸ்எம்.பளீல் மௌலானா ஊடகவியலாளர்களை மதிக்கின்ற தன்மையைக் கொண்டிருந்தார்;. அவரைவிட 37 வயது குறைவான என்னோடு நற்புக்கொண்டிருந்தார். எனது எழுத்துக்களை பாராட்டி ஊக்கப்படுத்தியவர். அந்த நல்ல மனிதருக்கு சுவர்க்கம் கிடைக்கப் பிரார்த்திப்போம்.
குறிப்;பு:- பளீல் மொலானா பவுன்டேசனின் ஏற்பாட்டில் மர்ஹூம் ஐ.எம்.எஸ்எம்.பளீல் மௌலானா அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் உருவில் வரவுள்ளது. ஆகவே ஐ.எம்.எஸ்எம்.பளீல் மௌலானா அவர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் விரிவுரையாளர் அஷ்ஷேய்க் எப்.எம்.ஏ.அன்சார் மௌலானாவின் 0718217933 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.
Comments
Post a Comment