வடக்கு கிழக்கு மாநிலம் என்ற கோட்பாட்டிலேதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பயணித்து வருகிறது.
இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹசனலி
இஸ்ஹாக்
வடக்கு கிழக்கு மாநிலம் என்பது தமிழ் பேசும் தாயகம், தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்ற கோட்பாட்டிலேதான் எங்களுடைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பயணித்து வருகிறது. அதே கோட்பாட்டில்தான் தமிழ் மக்களும் இருக்கின்றார்கள். எனவே நாங்கள் இனிமேலும் இனரீதியாக பிரிந்து வாழ முடியாது.
இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹசனலி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இன்று (24) விஜயம் செய்த போது அங்கு தெரிவித்தார்.
வைத்திய சாலைக்கு சென்ற அமைச்சருக்கு வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இந்த விஜயத்தின்போது சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி பேர்ள் வீரசிங்க, பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் உட்பட சுகாதார அமைச்சு உயரதிகாரிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இராஜாங்க அமைச்சர் ஹஸனலி அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது….
இன ரீதியாக பிரிந்திருக்க முடியாதென்ற சித்தார்ந்தத்தைக் கொண்டுள்ள இந்தப் பிரதேசத்தில் எதிர் காலத்தில் தமிழ் முஸ்லிம் இரண்டு சமூகங்களும் எங்களுக்கிடையே இருக்கின்ற சிறிய வேறுபாடுகளை களைந்து ஒன்று பட்டு வாழ வேண்டும்.
அவ்வாறான சிறிய வேறுபாடுகள் இருந்த காரணங்களினால்தான் 100 வருடம் பழமை வாய்ந்த இந்த வைத்திய சாலை கூட இரண்டாக பிளவு பட்டுள்ளது. அதே போல் எங்களுடைய பிரதேச செயலகம் பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கின்ற போது எங்கள் இதயத்திலிருந்து இரத்தம் வடிவதாகத்தான் நான் உணர்கின்றேன்.
இவ்வாறானதொரு நிலை இருக்கக் கூடாது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களினால் இவ்வாறு ஏற்பட்டு நீடித்துக் கொண்டு வந்துள்ளது. நாங்கள் இனிமேலும் இந்த புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி விட்டு பழைய சித்தார்ந்தத்திலே இனி மேலும் போக முடியாது. நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் பிரதேசத்தை ஒற்றுமை பூமியாக தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்ற கோட்பாட்டை ஒரு அர்த்தமுள்ளதாக நியாயப் படுத்துவதற்கு எங்களது செயல்களையும் ,செய்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
இந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். ஒன்றாக எமது அரசியல் பயணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருப்பவன் என்பதில் நானுமொருவன். அந்த வகையில் நாங்கள் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கியூள்ளோம். இந்த அரசாங்கத்தை தமிழர்களும் இ முஸ்லிம்களும் குறிப்பாக 90 வீதமான தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டில் ஒரு அரசியல் மறுமலர்ச்சியை தோற்றுவித்திருக்கிறார்கள். நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்களாகிய நாம் ஒன்று திரண்டு எங்களுடைய பொதுவான விடயங்களில் இந்த அரசாங்கத்துடன் இருந்து பெற்றுக் கொள்ளும் திட்டத்தினை நாங்கள் முன்னெடுத்து இந்த அரசாங்கத்தினூடாக செய்வதற்கு நாங்கள் பின்வாங்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்
வைத்திய அத்தியட்சகர் முரளீஸ்வரன் தலைமையில் வைத்திய நிபுணர்கள்இவைத்தியர்கள் மற்றும் வைத்திய சாலை அபிவிருத்திக் குழுவினரால் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
Comments
Post a Comment