கிழக்கின் முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் தாரைவார்த்து விடாதீர்கள் - பிரதித் தவிசாளர் சுபைர்
கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க முனைப்புடன் செயற்படுங்கள், முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் தாரைவார்த்து விடாதீர்;கள் என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் வித்தியாரம்ப விழா இன்று ஏறாவூர் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரே ஒரு சபையாக கிழக்கு மாகாண சபை காணப்படுகின்றது. இதில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும். இந்த யாதார்த்தத்தை அரசியல் தலைமைகள் புரிந்து நடக்க வேண்டும். முதலமைச்சர்; பதவியை வைத்துக் கொண்டு இரு சமூகங்களுக்கிடையில் குரோதங்களை ஏற்படுத்தாமல் விட்டுக் கொடுப்புடன் தமிழ், முஸ்லிம் தலைமைகள் செயற்பட்டு ஆரோக்கியமான முடிவினை எடுத்தல் வேண்டும்.
கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது ஆட்சியில் முஸ்லிம்கள் 15 உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பியுள்ளனர். ஆட்சியிலிருந்த மஹிந்த அரசுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைத்து, அவரது கட்சியில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமித்தார்.
மஹிந்த அரசினால் நியமிக்கப்பட்ட முதலமைச்சர் ஒரு பொம்மை முதலமைச்சராக செயற்பட்டு இம்மாகாண மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார்.
இன்று நாட்டில் சிறுபான்மை இன மக்கள் விரும்புகின்ற நல்லாட்சி நிலவுகின்றது. இந்த ஆட்சியினை உருவாக்குவதில் முஸ்லிம் சமூகம் அளப்பெரிய பங்காற்றியுள்ளது. இதன் மூலம் முஸ்லிம் சமூகம் கிழக்கில் நல்லாட்சி அமைய வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு மாற்றமாக முஸ்லிம் தலைமைகள் செயற்பட முடியாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவுள்ளனர். இதன் மூலம் மாகாண சபைகளுக்கு பொலிஸ். காணிகள் அதிகாரங்கள் கிடைக்கவுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் கிழக்கின் முதலமைச்சர் பதவியினை ஏனைய சமூகத்திடம் ஒப்படைப்பதானது கிழக்கில் முஸ்லிம்களின் இருப்புக்கு குந்தகமாக அமைந்துவிடும்.
எனவே இதனை உணர்ந்து முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியினைப் பெற்றுக்கொடுக்க அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
Comments
Post a Comment