ஹரீஸ் எம்.பியின் முறையீட்டால் மெட்ரோ மிரா் இணையத்தள செய்தி ஆசிரியா் பதவி நீக்கம்!
மெட்ரோ மிரர் இணையத்தளத்தில் வெளியான பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பான பிழையான செய்திக்கு விளக்கமளிக்குமாறு கல்முனை மேயர் நிசாம் காரியப்பருக்கும், அவரது ஊடக இணைப்பாளர் அஸ்லம் மௌலானவுக்கும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அதில் கடந்த பல தடவைகள் மெட்ரோ மிரர் எனும் இணையத்தளம் தனக்கு எதிராக பிழையான செய்திகளை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றும் ஒரு செய்தியை வெளியிட்டு எனது அரசியல் சமூக பயணத்திற்கு பங்கம் விளைவிக்க முற்பட்டுள்ளனர்.
இந்த இணையத்தளத்தின் ஆசிரியராக கடமையாற்றுகின்ற அஸ்லம் மௌலானா, கல்முனை மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் ஊடக இணைப்பாளராவார். எனவே, எனக்கெதிரான பிழையான செய்தி தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஹரீஸ் எம்.பி கேட்டுள்ளார்.
ஹரீஸ் எம்.பி.யின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறித்த செய்திகள் தொடர்பில் கல்முனை மேயர் நிசாம் காரியப்பரையும், அவரது ஊடக இணைப்பாளர் அஸ்லம் மௌலானாவையும் விசாரணைக்காக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்குமாறு கட்சியின் செயலாளர் ஹசன் அலிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, மெட்ரோ மிரர் இணையத்தளத்தின் ஆசிரியர் அஸ்லம் மௌலானாவை செய்தி ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இவரின் பதவி நீக்கம் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் விசாரணைக்கான உத்தரவினால் நடைபெற்றிருக்கலாம் எனக்கூறப்படுகின்றது.
( www.Mettroleader)
Comments
Post a Comment