இளம் எழுத்தாளர்களை சமூகமாற்றத்தின் பங்காளிகளாக மாற்ற வேண்டும்- மே.மா கல்விப் பணிப்பாளர்
எம்.ரீ.எம்.பாரிஸ்
மாணவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையை வெளிப்படுத்தி, அவர்களை சமூக மாற்றத்தின் முக்கிய பங்காளிகளாக மாற்றும் அரிய கலையே கதையாக்க வெளிப்பாடாகும். இளம் தலைமுறையினரிடம் காணப்படும் பிறழ்வான நடத்தைக் கோலங்களை மாற்றி அபிவிருத்திக்கான புத்தாக்கங்களை வெளிப்படுத்தும் இயலுமையை கதை சொல்தல் கலை வளர்க்கின்றது.
இளம் மாணவ எழுத்தாளர்களை சமூகமாற்றத்தின் பங்காளிகளாக மாற்றுவம் கதையாக்கச் செயற்றிட்டம் காலத்தின் தேவையாகும் என மேல் மாகாணகல்விப் பணிப்பளார் விமல் குணரத்ன தெரிவித்தார்.
கற்றல் கற்பித்தலில் இக்கலை அதிக அவதானத்தைப் பெற்று வருகின்றது என மேல்மாகாணக் கல்விப் பணிப்பாளர் விமல் குணரத்ன தெரிவித்தார்.
களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான'ஆக்கபூர்வக் கருத்து வெளிப்பாடு மற்றும் கதைசொல்தல் தொடர்பான ஆறுமாதச் செயற்றிட்டம் ஒன்றைஆரம்பிப்பது தொடர்பான கூட்டம் அண்மையில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மேற்பார்வையில் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் மேற்படித் திட்டத்தைஆரம்பிக்கவுள்ளது.
இதில் 30 தமிழ் மற்றும் சிங்களமொழி மூல இளம் மாணவ எழுத்தாளர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.
தெரிவு செய்யப்படும் மாணவ எழுத்தாளர்களுக்கான ஆறு நாள் நிபுணத்துவப் பயிற்சி செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடம்பெறும். இலவசமாக இடம்பெறவுள்ள இப் பயிற்சிநெறி முடிவில் 30 கதைகள் தெரிவுசெய்யப்பட்டு,அவை புத்தகமாக வெளியிடப்படும்.
இது தொடர்பாகமேலும் கருத்துத் தெரிவித்த கல்விப் பணிப்பாளர் 'சமூகமாற்றம் தொடர்பான வித்தியாசமான கருத்து நிலைகளை மாணவச் சமூகம் கொண்டுள்ளது. துரதிஷ்டவசமாக அவை பெரும்பாலும் கருத்திற்கொள்ளப்படுவதுகுறைவு.
செயற்றிடத்தில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு மூத்த எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் தமது கதைகளை கலந்தாலோசிக்கும் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். செயற்றிட்டமுடிவில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு விஷேட சான்றுப்பத்திரங்களும் வழங்கப்படும்.
இச் செயற்றிட்டத்தில் கலந்து கொள்ளவிரும்பும் மாணவர்கள் தமது பாடசாலைஅதிபரின் அத்தாட்சிப்படுத்தலுடனும், பெற்றோரின் விருப்ப வெளிப்படுத்தலுடனும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
எழுத்தாற்றல், சிறுகதையாக்கம், கவிதையாக்கம் மற்றும் மொழித்திறன் ஆகியதுறைகளில் திறமைகளை ஏற்கனவே வெளிப்படுத்திய மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் யாவும் எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்கப்பட வேண்டும். விண்ணப்ப முகவரி - ஆக்கபூர்வக் கருத்துவெளிப்பாடு மற்றும் கதைசொல்தல் பயிற்சிநெறி, தமிழ் பிரிவு,மாகாணக் கல்விப் பணிப்பாளர், மேல்மாகாணக் கல்வித் திணைக்களம், இலக்கம்76, ஆனந்தகுமார சுவாமி மாவத்த, க்ரீன் பாத், கொழும்பு 7.
மேலதிக விபரங்களுக்கு 0776653694 எனும் இலக்கத்துடன் அலுவலக நேரங்களில் தொடர்புகொள்ளவும்.
Comments
Post a Comment