இனவாதம் ,பிரதேசவாதம் பேசுபவர்கள் நிலைத்ததும் இல்லை அவர்கள் தீக்குளிப்பதில் தவறும் இல்லை
இனவாதம் பேசிக்கொண்டும், பிரதேசவாதம்
பேசிக்கொண்டும் தனது அரசியல் இருப்புக்களைத் தக்கவைத்துக் கொள்ள மக்களை பலியாக்கும் அரசியல்வாதிகள்
அதைவிட தீக்குளிப்பது மேலாகும் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும்,
அம்பாறை மாவட்ட ஸ்ரீ.ல.மு.கா. மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்
தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த
அமர்வு நேற்று (27) புதன்கிழமை பிற்பகல் முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் கூடியது.
இதன்போது உறுப்பினர் ஒருவர் கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான நூலகம் அமைந்துள்ள இடம்,
அதற்கு பெயரிடுதல் மற்றும் திறந்து வைத்தல் தொடர்பில் உணர்ச்சிவசப்பட்டு இனவாதக்கருத்துக்களை
கூறி தான் தீக்குளிக்கப்போவதாக கூறியபோது அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்
இவ்வாறு தெரிவித்தார்.
ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தொடர்ந்து
உரையாற்றுகையில்,
கிழக்கின் முகவெத்திலை என்றும்
பல்லின சமூகங்கள் வாழும் ஒரு மாநகரம் கல்முனை என்றும் நாம் பெருமையாகப் பேசிக்கொள்கின்றோம்.
இங்கு பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்-தமிழ் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய
வகையில் சமூகத்தின் தலைவர்களாக இருக்கும் நாம் ஏன் முயற்சிப்பதில்லை.
இங்கு உறுப்பினர்களாக பிரதிநிதித்துவப்படுத்தும்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊர்களையும், இனங்களையும் சார்ந்தவர்களாகக் காணப்படுகின்றோம்.
நாம் பேசும்போது மற்ற ஊர்களையும், இனங்களையும் நோவினை செய்வதுபோன்று பேசுகின்றோம்.
இவ்வாறு தொடர்ந்து செல்வோமாயின் இனவாதமும், பிரதேச வாதமும் இன்று மலிந்து காணப்படும்
கல்முனையில் இவ்வாதங்களை இல்லாமல் ஒழிப்பது எப்படி என வாதங்கள் பேசும் உறுப்பினர்களிடம்
கேட்கத் தோன்றுகிறது.
எமது கல்முனை மாநகர சபைக்குப்
பின்னர் உருவாக்கப்பட்ட மாநகர சபைகளிலும் எம்மைவிட குறைவான உறுப்பினர்களைக் கொண்ட மாநகர
சபைகளிலும் இவ்வாறான வாதங்களை காணக்கூடியதாக இல்லை. கல்முனை மாநகர சபை மாத்திரம் இனவாதத்தாலும்,
பிரதேச வாதத்தாலும் தொடர்ச்சியாக மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது.
மாநகர சபைக்குச் சொந்தமான நூலகத்திற்கு
கரவாகு மேற்கு நூலகம் என பெயர் பொறிக்க இங்கே தீர்மானம் மேற்கொள்ள முனைகின்றோம். கல்முனை
மாநகர சபை எல்லைக்கு கரவாகு மேற்கு என்ற உள்ளுராட்சி நிருவாகத்தினை இன்று ஏடுகளில்கூட
காணக்கூடியதாக இல்லை.
அன்று கரவாகு வடக்கு, கரவாகு தெற்கு
உள்ளுராட்சி நிருவாக எல்லைகளில் காணப்பட்ட நூலகங்களுக்கெல்லாம் இன்று கல்முனை மாநகர
சபை பொது நூலகம் – மருதமுனை, கல்முனை மாநகர சபை பொது நூலகம் – சாய்ந்தமருது என பெயர்
எழுதப்பட்டுள்ள நிலையில் இந்த நூலகத்திற்கு
கரவாகு மேற்கு நூலகம் என பிழையான பெயர் ஒன்றினை சூட்டுகின்றோம்.
கரவாகு மேற்கு நூலகம் என்று சொல்லப்படும்
கல்முனை மாநகர சபை பொது நூலகம் அமைந்துள்ள இடம் சேனைக்குடியிருப்பா அல்லது நற்பிட்டிமுனையா
என்பதை தீர்மானித்து அந்த ஊரின் பெயரினைச் சூட்டினால் பொருத்தமாக இருக்கும் என எனது
அபிப்பிராயத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பேசித்தீர்த்துக் கொள்ளக்கூடிய
விடயத்திற்கெல்லாம் பிரதேச வாதங்களையும் இனவாதங்களை பேசிக் கொண்டு உறுப்பினர்கள் இன்னும்
இன்னும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே பிரிவினைகளை தோற்றுவிப்பதற்கு முனையக்கூடாது. இன்னமும்
நாம் பிரிந்து நின்று சாதிக்க இருப்பதுதான் என்ன? பிரதேச வாதங்களையும் இனவாதங்களையும்
பேசிக்கொண்டு தனது அரசியல் இருப்புக்களைத் தக்கவைத்துக் கொள்ள மக்களை பலியாக்கும் அரசியல்வாதிகள்
தீக்குளிப்பதால் தீமையொன்றும் நிகழாது என்றார்.
Comments
Post a Comment