முஸ்லிம்களின் தலைமைத்துவம் முஸ்லிம்களை பாதுகாக்க கூடிய தைரியமுள்ள தலைமையாக இருக்க வேண்டும் -ஹரீஸ் MP கூறுகிறார்
பொதுபல சேனா மற்றும் ராவண பலய போன்ற தீவிரவாத அமைப்புக்களின் கொடூர பிடியில் சிக்கியுள்ள முஸ்லிம் சமுகத்தை காப்பது என்றால் முஸ்லிங்கள் தகுதியான தலைமைத்துவம் ஒன்றின் கீழ் ஒன்றுமைப்பட வேண்டும் என்று கல்முனை அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் சூளுரைத்தார்.
தமிழ் பத்திரிகைகளுக்கு வந்து எங்களுடைய வாயை பொத்தச் சொன்னார்கள்- கதிரைகளை தூக்கினார்கள்- என்று சொல்லும் தலைமையாக அது அமையக் கூடாது என்றும் அவர் குறிப்பிடார்.
முஸ்லிம் சமுகம் சார்ந்த பிரச்சனைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டுக்கும் கொண்டு சென்று தகுந்த தீர்வை பெற்றுத்தரக் கூடிய தலைமையாக அது இருக்க வேண்டும் என்றும் ஹரீஸ் எம்.பி. வலியுறுத்தினார்.
“முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிர வாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும்” எனும் தலைப்பில் மெஸ்ரோ ஏற்பாடு செய்திருந்த உரையாடலும் துஆப் பிரார்த்தனையும் எனும் நிகழ்வுக்கு முன்னிலை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார்.
நேற்று மாலை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் மெஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம் நசீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி. மேலும் உரையாற்றுகையில்;;
அண்மையில் அளுத்கம, தர்ஹாநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் பொதுபல சேனா மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறித் தாக்குதலைக் கண்டித்தும் ஈவிரக்கமற்றவர்களால் கொல்லப்பட்டும், சொத்துக்கள் சேதமாக்கப்பட்டும் துன்பகரமான நிலையில் இருக்கும் குறித்த பிரதேச மக்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்க பிரார்த்தனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றைய இந்த நிகழ்வையும் சில தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட இது போன்ற நிகழ்வுகளையும் நிறுத்துவதற்கு அரச தரப்பில் இருந்து பல்வேறுபட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும்
மேலிடத்தின் அனுசரணையுடன் கல்முனை பொலிசாரால் இன்றைய நிகழ்வையும் தடை செய்ய முயற்சிகள் மேட்கோள்ளப்பட்ட போது சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா அவர்கள் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினரால் முறியடிக்கப்பட்டு இன்றைய நிகழ்வு நடந்து கொண்டிருப்பதாகவும் இவ்வாறான தடை உத்தரவை முறியடித்த சிரேஷ்ட சட்டத்தரணியும் ஸ்ரீ லங்கள் முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவருமான எஸ்.எம்.எம்.முஸ்தபா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வாறான நிகழ்வை மக்கள் வீதியில் கூடுவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்ற அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு ஒன்றின் ஊடாக கல்முனை பொலிசார் தடுத்தன் ஊடாக சிறுபான்மையினருக்கு ஜனநாயக ரீதியான நடைமுறைகளுக்கு கூட தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டுள்ள இவ்வாறான தாக்குதல்கள் திட்டமிடப்பட்ட அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இவ்வாறான செயல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியம் சம்மந்தமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் முடிய அறையில் ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், 18 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து பேசிய போது முஸ்லிம்களுக்கு எதிராக மேட்கோள்ளப்பட திட்டமிடப்படும் தாக்குதல்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்படுத்தியதாகவும் அது போன்று பல்வேறு இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான கொடூர ததக்குதல்கள் தொடர்பில் சிவில் அமைப்புக்களினால் எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
முஸ்லிம் சமுகத்தில் இருக்கின்ற பாரிய குறைபாடு பிரச்சினைகள் வந்தால் மட்டும் கூடுவது பின்னர் விட்டு விடுவது என்பதுதான், இவ்வாறு விட்டு விட்டதன் பலனையே தற்போது அளுத்கம, தர்ஹாநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் முஸ்லிம் சமுகம் அனுபவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அளுத்கம, தர்ஹாநகர், பேருவளை பிரதேசங்கள் தீவிரவாதிகளின் தாக்குதல்குக்கு உட்பட்டுக் கொண்டிருக்கும் போது குறித்த தாக்குதலை நிறுத்துவதற்கு தாங்கள் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்ட போதும் உடனடியாக சாத்தியமடயாமல் போனதாக கவலை தெரிவித்தார்.
முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்று இல்லாததன் காரணமாகவே முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதாகவும் உடனடியாக இங்கு வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை இன்றுவரை எடுக்கவில்லை என்றும் இவ்விடயத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அளுத்கம, தர்ஹாநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் பொது பலசேன மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்களையும் கொள்ளையடிப்புக்களையும் அரச பாதுகாப்பு படையினர் கைகட்டி பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
அரசு- சிறுபான்மை முஸ்லிம் மக்களை பாதுகாக்க தவறியதன் காரணமாகவே அரசுடன் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரசானது ஒரு தீர்மானத்துக்கு வந்ததாகவும் குறித்த விடயத்துக்கு நாங்கள் உள்நாட்டில் மட்டும் தீர்வை பெற்று விட முடியாது. எஞ்சி இருக்கின்ற பிரதேசங்களையாவது பாதுகாப்பதென்றால் அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளில் இருந்து அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
தெற்கில் இருக்கின்ற சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களுடன் ஐக்கியமாகவே இருந்து வருவதாகவும் பொதுபலசேனா போன்ற குறுகிய எண்ணம் கொண்ட தீவிரவாத அடக்கியாளும் எண்ணம் கொண்ட சிலராலேயே இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயல்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு காரணம் பொதுபலசேனா மற்றும் ராவண பலய போன்ற அமைப்புகள் முன்னெடுத்துள்ள தீவிர நடவடிக்கியானது இங்கு இறுக்கமான அடக்கியாளும் நோக்கம் கொண்ட அரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்துடன் உணர்ச்சியுட்டும் பேச்சுக்களை பேசி மக்களை பிழையாக நடத்த முற்படுவதாகவும் இந்நிலை நாட்டுக்கு ஆரோக்கியமானதாக அமையாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
பொதுபலசேனா மற்றும் ராவண பலய போன்ற தீவிரவாத இயக்கங்களால் முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்கலாகாக இந்தநாட்டுக்கு போதைப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் என்றும் கருத்தடை மாத்திரைகளை வழங்குபவர்கள் மற்றும் ஹவாலா உண்டியல் முலம் பணத்தினை அனுப்புபவர்கள் என்பன போன்ற 18 குற்றச்சாட்டுக்களை முஸ்லிம்கள் மீது திணிப்பதாகவும் கூறினார்.
முஸ்லிம்கள் மீது போலியான குற்றங்களை சுமத்தி, தீவிர போக்குக்கொண்ட சிங்கள இளைஞர்களை தம்வசப்படுத்தி அரசாங்கத்தை பயமுறுத்தி அரசாங்கத்தை அடிபணிய வைத்துள்ளார்கள். இதன் எதிரொலியாகவே பொதுபலசேனா மற்றும் ராவண பலய போன்ற தீவிரவாத அமைப்புக்களை தடை செய்ய முடியாது என்று அரசு வெளிப்படையாகவே சொல்லி வருகிறது.
30 வருடங்கள் யுத்தம் செய்த புலிகளை அடக்கியதாக மார்தட்டும் அரசு இங்கு வாழும் முஸ்லிம் சமுகத்தின் மீது பொதுபலசேனா மற்றும் ராவண பலய போன்ற தீவிரவாத அமைப்புக்களால் மேட்கொள்ளப்படும் காட்டுமிராண்டித் தனங்களை தடுக்க முடியாமல் இருப்பது அரசியல் காரணங்களுக்காவே என்பது புலனாவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மௌலாவி அலி அஹமத் ரஸாதி அவர்கள் முஸ்லிம்களின் வரலாறு, ஒற்றுமை, நமது பாதுகாப்புக்கு அரசாங்கத்தையோ ஜனாதிபதியையோ முஸ்லிம் அரசியல் தலைமைகளையோ நம்பியிருக்க கூடாது என்றும் இறைவனை நெருங்க வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்து- நீண்டதொரு இஸ்லாமிய விளக்கத்தை தந்ததுடன் துஆ பிரார்த்தனையையும் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், இளைஞர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.
Comments
Post a Comment