வவுனியாவில் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்துத் துரத்திய பொலிஸார்
வவுனியாவில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாமல் பொலிஸார் தலையிட்டு விரட்டி விரட்டி ஆர்ப்பாட்டக்காரர்களை துரத்தியுள்ளனர்.
வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு எதிராக சமூக நிதிக்கான வெகுஜன அமைப்பை சேர்ந்த சில தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமயமே இச் சம்பவம் இடம்பெற்றது.
இந்நிலையில், அவ் விடத்திற்கு வருகை தந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கோரியிருந்தார்.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது கோரிக்கைக்கு செவி சாய்காக்காது, அளுத்கம சம்பவத்திற்கு நீதியான விசாரணை நடத்து, முஸ்லிம் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடு, முஸ்லிம்களை தாக்காதே என் கோசமெழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டனர்.
அந்த இடத்திற்கு வருகை தந்த வவுனியா தலைமை பொலிஸ் நிலையதத்தின் பொறுப்பதிகாரி சன் அபயரத்தின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இவ்விடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது எனவும் அவர்கள் வைத்திருந்த பதாதையையும் பறிமுதல் செய்திருந்தார்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமெழுப்பி பொலிஸாருடன் முரண்பட்டுக்கொள்ள ஒரு சிலரை பொலிஸார் இழுத்துச் சென்ற போதிலும் அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவர்களை விடுவித்து சென்றிருந்ததுடன் அங்கிருந்தவர்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர்.
இதேவேளை அவ் அமைப்பின் பிரதிநிதிகளான சிலரை பள்ளிவாசல் பிரதேசத்தல் இருந்து சில மீற்றர் தூரம் வரை பொலிஸார் விரட்டியிருந்தனர்.
இதேவேளை வவுனியா நகர் முழுவதும் இன்று காலையில் இருந்து பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் கலகம் அடக்கும் பொலிஸாரும் நகர்ப் பகுதியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
Comments
Post a Comment