அரசாங்க பாடசாலைகளில் தற்போது 1048 ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் போது ஆங்கில பாடத்தில் பேச்சு மற்றும் கிரகித்தல் முறைமையையும் உள்ளடக்கி அதற்கு 20 புள்ளிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த முறைமை 2018 இற்கு பின்னர் செயற்படுத்தப்படுமெனவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ.தே.க. எம்.பி. சஜித் பிரேமதாச அரச பாடசாலைகளில் ஆங்கில மொழி ஆசிரியர்கள் தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச எம்.பி.யின் கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ; அரசாங்க பாடசாலைகளில் தற்போது 1048 ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இதற்கு நாட்டில் ஆங்கில மொழி பட்டதாரிகள் குறைந்தளவில் இருப்பதே காரணமாகும். எவ்வாறாயினும் கடந்த காலங்களில் பாடசாலைகளுக்கு ஆங்கில மொழி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேலதிகமாக டிப்ளோமா பட்டதாரி ஆசிரியர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த ஆசிரியர் இடைவெளிகளை நிரப்ப பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை நாட்டில் பாடசாலைகளில் மாணவர்களிடையே ஆங்கில மொழியறிவை அதிகரிக்கும் வகையில் 1000 பாடசாலைகளில் ஆங்கில மொழி பேச்சு பயிற்சி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் போது ஆங்கில மொழி பாடத்தில் பேச்சு மற்றும் கிரகித்தல் முறையை உள்ளடக்கி அதற்கென 20 புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்த ஆராயப்பட்ட போதும் அதனை 2018 ஆம் ஆண்டு வரை ஒத்தி வைக்க அமைச்சரவையூடாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
Comments
Post a Comment