சுய இலாபத்திற்காக இன முரண்பாட்டை தூண்ட வேண்டாம் - கிழக்கு மாகாண சபை உறுப்பினர்; சிப்லி பாறூக்

சுய இலாபத்திற்காக இன முரண்பாட்டை தூண்ட வேண்டாமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அண்மைக் காலங்களாக காத்தான்குடியை அண்மித்த பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமிக்கின்ற செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. 
இந்த தொடர்ச்சியான ஆக்கிரமிப்புச் செயலானது இன்று நேற்று அல்லாமல் சுமார் இருபது, முப்பது வருடங்களாக காத்தான்குடியையும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் திட்டமிடப்பட்ட வகையில் இந்த ஆக்கிரமிப்புச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இந்த காணி அபகரிப்பு சம்பந்தமாக நாங்கள் பின்னோக்கி பார்க்கின்ற போது ஆரையம்பதியிலே மயானமாக இருந்த சுமார் 08 ஏக்கருக்கும் மேலான கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்திருந்த பொது மயானக் காணி தற்பொழுது கலாச்சார மண்டபம் மற்றும் சந்தைக் கட்டடத் தொகுதிகளை அமைத்து அவை வேறு பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 
இதே போன்று 1985ம் ஆண்டுகளில் உறுகாமம், உன்னிச்சை போன்ற இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம் அகதிகள் குடியேறுவதற்காக காத்தான்குடி ஜாமியுள்ளாபிரீன் பள்ளி வாசலுக்குச் சொந்தமான காணியில் 87 குடிசைகள் அமைத்து அவர்களை குடியமத்திருந்தார்கள். எனினும் அக்காணியில் குடியமர்த்தப்பட்ட அம்மக்களை 1988 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அம்மக்களின் இருப்பிடங்களும் அக்காணியில் அமைந்திருந்த முகைதீன்; பள்ளிவாசலும் தீக்கிரையாக்கப்பட்டு அம்மக்கள் அப்பிரதேசத்தை விட்டும் விரட்டியடிக்கப்பட்டார்கள். இது தற்பொழுது இருக்கின்ற செல்வா நகருக்கு கிழக்கே இருக்கின்ற பகுதியாகும். எனினும் அப்பகுதி 1990களுக்கு பின் தமிழ் மக்களுக்குரிய சவக்காலை என்று கூறப்பட்டு முஸ்லிம்களுக்கு சொந்தமான அக்காணி பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு சடலங்கள் அடக்கி வரப்பட்டது. 
இது திடீரென சென்ற ஆண்டு இன்னுமோர் பொது விளையாட்டு மைதானமாக மாற்றம் பெறுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 
இதே தொடரில் 2006ம் ஆண்டு காலப்பகுதியில் பாலமுனை முகைதீன் பள்ளிக்குச் சொந்தமான மையவாடி காணியில் ஒரு பிணக்கினை ஏற்படுத்தி பாலமுனைக்கு அண்மித்த பிரதேசமான வேடர் குடியிருப்பில் வாழும் தமிழ் மக்களின் சவங்களையும் புதைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து அதனையும் அவர்கள் பலவந்தமாக ஆக்கிரமிக்க முற்பட்டார்கள். எனினும் அக்காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலாங்கி இருந்த காரணத்தினாலும் முஸ்லிம்கள் அதற்கு நிகரான பலமற்றவர்களாக காணப்பட்டதனாலும் அவர்கள் அவ்வாறு செய்ய முற்பட்டனர், ஆனால் 2006ம் ஆண்டு பிரதேச செயலாளராக இருந்த அமலநாதன் ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி வேடர் குடியிருப்பு மக்களுக்கு முகைதீன் ஜும்ஆப் பள்ளிக்குச் சொந்தமான அந்தக் காணியினை அரைவாசியாக பிரித்து கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் இரண்டு ரூட் 5.51 பேர்ச்சஸ் என்ற அந்த அளவினை வேடர் குடியிருப்பு மக்களுக்குரிய மயானமாகவும் மீதி அரைவாசியை முகைதீன் பள்ளிக்குரிய மையவாடியாகவும் வழங்கியிருந்தார். 
ஆனால் அதுவும் தற்பொழுது இன்னொரு விளையாட்டு மைதானமாக தோற்றம் பெற்றுள்ளது.
இதற்கு இன்னுமொறு சிறந்த உதாரணமாக 05ம் கட்டையில் கோவில் குளம் சந்தியில் அமைந்துள்ள கணணி கற்கை நிலையம் அமைந்துள்ள அந்தக் காணியானது ஏற்கனவே பொது மாயானமாக பிரகடணப்படுத்தப்பட்டு இந்துக்களுடைய பொது மயானமாக பாவிக்கப்பட்டு வந்திருந்தது இது கூட இப்பொழுது வேறு தேவைக்காக மாற்றம் பெற்று வந்துள்ளது. 
இதே போன்று தான் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பூநொச்சிமுனையில் ஒரு அனாதை பிணத்தினை புதைத்து அதுவும் தங்களுடைய காணி என்று பலவந்தமாக உரிமை கோரினார்கள். 
இவ்வாறு அனாதைப் பிணங்களை புதைத்தால் அதற்கு யாரும் உரிமை கோர முடியாது மேலும் அதனை மீண்டும் தோண்டியெடுத்து வேறு இடத்தில் புதைக்க முற்படமாட்டார்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறான அனாதைப் பிணங்களை புதைத்தல் என்ற யுக்தியுனூடாக முஸ்லிம்களுடைய எல்லைப்புற காணிகள் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்படுவதை எங்களால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இதே போன்று தான் அண்மையில் இடம்பெற்ற கர்பலா காணி பிரச்சினையும், 2010ம் ஆண்டு காலப்பகுதயில் ஆயுதம் தாங்கிய குழுக்களாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தவர்கள் அனாதைப் பிணங்களை புதைத்து சுமார் 2 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை பலவந்தமாக கைப்பற்றி அதை தங்களுடைய மயானம் என்று பிரகடணப்படுத்தியிருந்தர்கள். 
இவ்வாறு கைப்பற்றியிருக்கும் காணிக்கும் ஏற்கனவே செல்வா நகர் கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்த காணிக்குமிடையில் வேறும் 50 மீற்றர் கூட இடைவெளி இல்லாத நிலையில் இன்னுமோர் புதிய ஆக்கிரமிப்பு மயானத்தை உருவாக்கினார்கள். இந்த பிரச்சினை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பால் முஸ்லிம்கள் இவ்வாறான ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் திருமதி சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு அவர்களுடைய அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது அந்த அறிக்கையின் பிரகாராம் சர்ச்சைக்குரிய கர்பலா மயானப்பூமி தனியார் காணி என்றும் அங்கு அமைக்கப்பட்டிருகிகின்ற மயானம் எந்த விதமான அனுமதிகளும் இல்லாமல் உருவாக்கப்பட்ட மயானம் என்றும் குறிப்பிடப்பட்டது. 
அப்படி அது ஓர் தனியார் காணி என்று உறுதிப்படுத்தப்பட்டும் இன்று வரை சட்டவிரோதமாக அங்கு சடலங்கள் புதைக்கப்படுகின்றது இதனை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு முஸ்லிம்களுடைய காணிகள் படிப்படியாக மயானத் தேவைக்கென்று பலவந்தமாக ஆக்கிரமிக்கப்படுவதும் கால ஓட்டத்தில் அவை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. 
இதிலொரு அங்கமாகத்தான் 18.03.2014 செவ்வாய்க்கிழமை பாலமுனையில் இடம்பெற்ற செயற்பாட்டை நாம் காணலாம். முஸ்லிம் தனவந்தர் ஒருவருக்கு சொந்தமான 23 ஏக்கர் காணியில் பலவந்தமாக நுழைந்த சில தமிழ் சகோதரர்கள் ஒரு சடலத்தினை புதைக்க முற்பட்டார்கள் இதனை காணி உரிமையாளர் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்ததுடன் பொலிஸாரின் உதவியை நாடினார் இதன் போது சமூகமளித்திருந்த அச்சடலத்தினுடைய சொந்க்காரர்கள் இந்த இடம் மயானமாக பிரகடணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நீங்கள் சடலத்தினை அங்கு அடக்கமுடியும் என்று மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் கூறியதாக கூறினார்கள் இதே சாட்சியத்தினை இது தொடர்பாக 18.03.2014 அன்று மாலை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படபொழுது நீதிபதி முன்பாக இதேபோன்று சாட்சியமளித்தார்கள். ஆக ஒரு தனியாருக்குச் சொந்தமான காணியை மயானம் என்று எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் பிரகடணப்படுத்துவதனூடாக இரண்டு சமூகங்களுக்கிடையில் மனிதாபிமானமற்ற ரீதியில் பாரிய ஓர் இனப்பிரச்சனையை உருவாக்குவதற்கு அரச நிர்வாகத்தில் இருப்பவர்கள், அரசியல் அதிகாரமில்லாத அரசியலிலிருந்து மக்காளால் ஒதுக்கப்பட்ட முன்னால் அரசியல் பிரமுகர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் போன்றோர் இதற்கு பக்கபலமாக இருப்பதும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆக்கம் கொடுக்கின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இதனை அவர்கள் தொடர்ந்தேர்ச்சியாக செய்வார்களாக இருந்தால் இரண்டு சமூகங்களும் மீண்டும் ஒரு முறை இன ரீதியான மோதல்களுக்குள் பலவந்தமாக தள்ளப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. 
ஏனென்றால் மண்முனைப் பற்று பிரதேசத்தை எடுத்துக் கொள்ளும் போது 37 சதுர கிலோமீற்றர் பரப்பினை அது கொண்டுள்ளது. அதில் 29மூ வீதமான முஸ்லிம் சமூகத்தினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதனடிப்படையில் இந்த 29மூ வீதமான முஸ்லிம்களுக்கு கொடுக்க வேண்டிய காணியின் அளவு கிட்டத்தட்ட 1ஃ3 பங்காகும். அதாவது 12 சதுர கிலோ மீற்றர் அளவு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் மண்முனைப் பற்று பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் கொண்டுள்ள காணியின் அளவினை பார்க்கின்ற போது இரண்டு தொடக்கம் மூன்று சதுர கிலோ மீற்றர் பரப்பினையே அவர்கள் கொண்டுள்ளார்கள். எனவே அவர்களுடைய சனத்தொகை பரம்பலுக்கேற்ற காணிப் பங்கீடு அங்கு வழங்கப்படவில்லை. 
அதே போன்று காத்தான்குடியை அண்டிய பிரதேசங்களை எடுத்து நோக்குகின்ற பொழுது 4 சதுர கிலோமீற்றர் அதாவது 930 ஏக்கர் காணி பரப்பினுள் சுமார் 60,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அந்த நிலப்பரப்புக்களையும் அவர்கள் ஆக்கிரமிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். 
இவ்வாறாக எல்லா வகையிலும் முஸ்லிம்களை நெருக்கி அவர்களை அடக்கி ஒடுக்குகின்றபொழுது முஸ்லிம்கள் பொறுமை இழந்து அவர்களும் வீதியில் இறங்குகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
ஆகவே இது பற்றி அரச நிருவாக உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் தலையிட்டு இப்பிரச்சினைக்கு உடனடியாக முற்றறுப்புள்ள வைக்க வேண்டும். ஏனெனில் இதனை ஒரு சிறிய பிரச்சினையாக கருதாது இரண்டு சமூகங்களுக்கிடையேயும் பிளவுகளை உண்டு பண்ணி பல பொருளாதார, உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தும் அளவிற்கு இப்பிரச்சணை கொண்டு செல்லப்படுகின்றது. இதற்குரிய முழுப் பொறுப்பும் அரச நிருவாக, சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையே சாரும். ஏனெனில் இக்காணிகள் தனியார் காணிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பின்பும் அனாதைச் சவங்களை கொண்டு வந்து புதைப்பதும் பின்னர் அவை எங்களுடைய சவச்சாலை என்று கூறுவதும் அதன் பிற்பாடு அச்சவச்சாலைகளை அவர்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்துவதும் பின்னர் தங்களுக்கு சவச்சாலை தேவை என்று தனியார் காணிகளை பலவந்தமாக ஆக்கிரமிப்பதுமாக இச்செயற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனவே முஸ்லிம்கள் வாழுகின்ற காணிப் பரப்புக்கள் வரையறுக்கப்பட்ட குறுகியதாகவே காணப்படுகின்றது. எனவே முஸ்லிம்கள் தற்பொழுது வாழ்கின்ற காணிகளை அவர்கள் முழுமையாக அனுபவிப்பதற்கும், எதிர்கால முஸ்லிம் சந்தததியினர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உரிய முறையிலான காணிப் பங்கீட்டினைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்காத்தினதும், மட்டக்களப்பு மவாட்ட அரசாங்க அதிபர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரினதும் கட்டாயப் பணியாக இது காணப்படுகின்றது. மேலும் அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இப்பிரச்சனைகளில் தலையிட்டு இரு சமூகத்தினரிடையேயும் எந்தவித பிளவுகளும் ஏற்படாமல் அமைதியை பேணுவதற்கு உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என அவரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று