வட கிழக்கு காணி பிரச்சினைகளுக்கு மத்தியஸ்த குழு!
வட கிழக்கு மாகாணங்களில் காணி விவகாரங்கள் தொடர்பில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நீதியமைச்சு ஒரு விசேட காணி மத்தியஸ்த குழுவை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இதனூடாக காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க இணக்கப்பாடுகளை காணக்கூடியதாக இருக்கும் என குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பதற்கு ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் முன் வந்திருப்பதாகவும் கூறினார்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் சட்ட அமுலாக்கம், நீதியைப் பெறும் வழிமுறைகள் மற்றும் சமூக இணைப்பைப் பலப்படுத்தல் எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு சர்வதேச தொடர்புகளுக்கும் உபாயங்களுக்குமான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் இடம்பெற்றது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது: நாட்டில் செயற்திறன் மிக்கதும், பாரபட்சமற்றதும் சகல சமூகத்தினருக்கும் பயன்தரத்தக்கதுமான நீதி முறைமையை நடைமுறைப்படுத்துவதில் கூடுதல் கரிசனை செலுத்தப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) ,நாட்டின் சகலரும் நீதியைப் பெறுவதற்கான வழிமுறைகளை சரிவர அடைந்து கொள்வதற்காக நீதியமைச்சு உட்பட புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சு என்பவற்றின் ஊடாக சிறப்பான செயல்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
சட்ட உதவி வழங்கல், மத்தியஸ்தம் செய்து வைத்தல் என்பவற்றுக்கான ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது. தேசிய சட்ட உதவி கொள்கையை வகுப்பதிலும் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் உரிய பங்களிப்பைச் செய்து வருகின்றது. 2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு மக்களுக்கு சட்ட உதவி சென்றடைவது பற்றிய பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. பல குறைபாடுகளும் அவ் ஆய்வின் மூலம் இனங்காணப்பட்டது. மக்களில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் தரப்பினரான பெண்கள் சிறுவர் சிறுமியர் ஆகியோர் உரிய சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வது பற்றியும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் காணி சம்பந்தமாக எழும் பிரச்சினைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. வட கிழக்கு மாகாணங்களில் காணி விவகாரங்கள் தொடர்பில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நீதியமைச்சு ஒரு விசேட காணி மத்தியஸ்த குழுவை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இதனூடாக காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க இணக்கப்பாடுகளை காணக்கூடியதாக இருக்கும். அமைச்சின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பதாக ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் இணக்கம் தெரிவித்திருக்கிறது.வெளிநாட்டு தூதுவர்களும், உயர் ஸ்தானிகர்களும், அதிதிகளும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் , ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் திரு. ஹேயோலியங் க்யூ பிரதான உரையாற்றினார்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் சந்திரசிரி முத்துகுமாரண, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் எரிக் இளையபராச்சி ஆகியோரும் உரையாற்றினர்.
Comments
Post a Comment