ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தியது ஜம்இயத்துல் உலமா
புதிய நிறுவனமொன்றினூடாக பணிகள்
* புதிய இலட்சினையும் அறிமுகம்
* தேசிய ஒழுங்கு, அபிவிருத்தி பேணும் வகையில் முடிவு
* முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை நிறுத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமா நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த பணிகள் சேவைநோக்குள்ள புத்திஜீவிகள் தொழில் வல்லுநர்கள் உள்ளடங்கிய உத்தரவாதமுள்ள நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உலமா சபை, புதிய நிறுவனத்தை கண்காணித்தல், வழி நடத்துதல் போன்றவிடயங்களை தாம் முன்னெடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள உலமா சபை தேசிய பொருளாதார அபிவிருத்தியையும் சமூக ஒழுங்கையும் பேணிப் பாதுகாப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நாட்டிலுள்ள ஏனைய தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவன ங்கள் போன்று புதிய நிறுவனமும் செயற்பட இருப்ப தாகவும் தெரிவித்து ள்ளது.
இலாப நோக்கமின்றி சேவை நோக்கத்தில் இயங்கும் வகையில் புத்திஜீவிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அடங்கிய 10 பேர் இந்த நிறுவனத்துக்கு நியமிக்கப்பட்டு ள்ளனர். இது தவிர 6 பேர் கொண்ட முகாமைத்துவ சபையும் நியமிக்கப்பட்டு ள்ளது.
புதிய நிறுவனத்தினூ டாகவே இனி ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் என ஹலால் சான்றிதழ் பெறும் நிறுவனங்களுக்கு கடந்த மாதம் அறிவித்துள்ளதாகவும் இதுவரை எந்த நிறுவனமும் ஹலால் சான்றிதழ் பெறும் நடவடிக்கையில் இருந்து ஒதுங்குவதாக அறிவிக்கவில்லை எனவும் உலமா சபை ஹலால் பிரிவு கூறியது. புதிய சில நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளன.
தற்பொழுது பயன்படுத்தும் இலட்சினைக்குப் பதிலாக புதிய இலட்சினையொன்றை அறிமுகப்படுத்த ஹலால் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்காகவும் வேறு இலட்சினை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
ஹலால் இலட்சினையை பொருட்களில் பொறிப்பது கட்டாயம் இல்லை என்று குறிப்பிட்ட உலமா சபை ஹலால் பிரிவு, ஹலால் சான்றிதழ் பெற்றுள்ள பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு பள்ளிவாசல் ஊடாகவும் பத்திரிகை விளம்பரங்கள், இணையத்தளம் என்பவற்றினூடாகவும் அவ்வப்போது அறிவூட்ட இருப்பதாக தெரிவித்தது.
பொதுமக்களுக்கு ஹலால் சான்றிதழ் குறித்து சந்தேகங்கள் இருந்தால் ஹலால் பிரிவின் முன்னைய அவசர இலக்கமான 0117425225 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை தனியான நிறுவனமொன்றுக்கு கையளிக்கப்பட்ட போதும் சரீஆ தொடர்பான தெளிவுகள், ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் பொருட்கள் குறித்து பரீட்சிக்கும் நடவடிக்கை போன்றன உலமாக்கள் அடங்கிய குழுவினாலேயே இடம்பெற உள்ளது.
ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டில் நம்பிக்கைத் தன்மையை பேணும் வகையில் சகல ஒழுங்குகளும் முன்னெடுத்திருப்பதாக கூறிய ஹலால் பிரிவு, புதிய நிறுவனத்தில் சட்டத்தரணிகள், கணக்காளர், சந்தைப்படுத்தல் நிபுணத்துவம் உள்ளோரும் அடங்குவதாக குறிப்பிட்டது.
ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவை தனியான நிறுவனமொன்றுக்கு வழங்கப்படுவது குறித்து முஸ்லிம்கள் அச்சமடையத் தேவையில்லை என்று தெரிவித்த உலமா சபை, புதிதாக ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் முறை குறித்து மக்களை தொடர்ந்து அறிவூட்ட இருப்பதாக கூறியது.
கடந்த காலத்தில் ஹலால் சான்றிதழ் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள், பிரச்சினைகள் ஏற்பட்டது தெரிந்ததே.
பலதரப்பட்ட பங்குதாரர்கள், அதிகாரிகள், மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னரே உத்தரவாதமுள்ள வரையறுக்கப்பட்ட நிறுவனமொன்றின் அமைப்பில் சுதந்திரமான நிறுவனமொன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
Comments
Post a Comment