க.பொ.த. சா/த பரீட்சை:
ரியூஷன்கள், மாதிரி வினாத்தாள்கள் கருத்தரங்குகளுக்கு நள்ளிரவு முதல் தடை
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை 10ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள், கடந்த கால மற்றும் பரீட்சைக்கு வரலாமென ஊகிக்கப்படும் வினா மாதிரிகளை அச்சிட்டு வழங்குதல் உள்ளிட்ட அனைத்து செயற் பாடுகளும் இன்று (04) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. ஜே.எம். புஸ்பகுமார கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, இந்த விதிமுறையினை மீறி செயற்படும்
தனியார் வகுப்புகள் அல்லது ஆசிரியர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் பிரபல்யமாகவோ அல்லது இரகசியமாகவோ பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை இலக்கு வைத்து விசேட தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் அல்லது பரீட்சை மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் எவரேனும் ஈடுபடுவார்களாயின் அது குறித்த தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு உடனுக்குடன் பெற்றுத் தரவேண்டுமெனவும் ஆணையாளர் நாயகம் பொது மக்கள் மற்றும் பெற்றோரை கேட்டுக் கொண்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கென அரசாங்கத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு 05 தினங்களுக்கு முன்பிருந்தே தனியார் வகுப்புகளின் இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக நிறுத்த வேண்டுமென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் ஏற்கனவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இறுதி 05 தினங்களாவது பரீட்சை பற்றிய பயம், களைப்பு, படபடப்பின்றி சுதந்திரமாகவும் தன்னம்பிக்கையுடனும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கிலேயே இவ்விதிமுறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் அநாவசியமான குளறுபடிகளை தவிர்க்க முடியுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த வருடம் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு முன்னதாக தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் பரீட்சையில் வந்த அதே கேள்விகளை மாதிரி வினாத்தாளாக அச்சிட்டு வழங்கியிருந்தமை தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்தே பரீட்சைகள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து இத்தீர்மானத்தினை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment