இந்த வருடம் கடமையிலிருந்த வேளை 52 ஊடகவியலாளர்கள் படுகொலை
52 ஊடகவியலாளர்கள் தமது கடமையின் நிமித்தம் இந்த வருடத்தில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் கண்காணிப்பு அமைப்பு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஊடகவியலாளர்கள் சிறையிலடைக்கப்பட்டமை தொடர்பில் இரண்டாவது மோசமான ஆண்டாக பதிவேடுகளில் சுட்டிக்காட்டப்படுகின்ற போதும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஊடகவியலாளர்களது படுகொலைகளில் வீழ்ச்சி காணப்படுவதாக நியூயோர்க்கை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த வருடத்தில் அதிகளவான ஊடகவியலாளர்கள் மரணத்தை தழுவிய நாடுகள் வரிசையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிரியா முதலிடத்தில் உள்ளது. அங்கு இந்த வருடம் 21 ஊடகவியலாளர்கள் தமது பணியின் நிமித்தம் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிரியாவுக்கு அடுத்து அதிகளவு ஊடகவியலாளர்கள் மரணங்களை எதிர்கொண்ட நாடுகள் வரிசையில் அடுத்தடுத்த இடங்களில் எகிப்து, பாகிஸ்தான், சோமாலியா, பிரேசில், ஈராக், மாலி, ரஷ்யா, துருக்கி, பங்களாதேஷ், கொலம்பியா, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் உள்ளன.
எகிப்தில் 6 பேரும் பாகிஸ்தானில் ஐவரும் சோமாலியாவில் நால்வரும், பிரேசில் மற்றும் ஈராக்கில் தலா மூவரும் மாலி மற்றும் ரஷ்யாவில் தலா இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேசமயம் துருக்கி, பங்களாதேஷ், கொலம்பியா, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் தலா ஒரு ஊடகவியலாளர் வீதம் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் சிரியாவில் சுமார் 30 ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர். ஊடகவியலாளர்கள் அதிகளவில் சிறையிலடைக்கப்பட்ட நாடாக தொடர்ந்து இரண்டாவது வருடமாக துருக்கி முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஈரானும் சீனாவும் உள்ளன. இந்த ஆண்டில் சிறையிலடைக்கப்பட்ட 211 ஊடகவியலாளர்களில் அரைப்பகுதிக்கும் அதிகமானோர் மேற்படி நாடுகளில் சிறையிலடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்கள் தமது பணிக்காக சிறையிலடைக்கப்படுவது சமூகத்தை நசு க்கும் சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்டது என பாதுகாப்பு சபையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜோயல் சிமொன் தெரிவித்தார்.
Comments
Post a Comment