யுனிசெப் நிறுவனம் நடாத்தும் சர்வதேச சிறுவர் தின இலங்கைக்கான நிகழ்வு மருதமுனையில்
யுனிசெப் நிறுவனம் நடாத்தும் சர்வதேச சிறுவர் தின இலங்கைக்கான நிகழ்வை கிழக்கு மாகாணத்தில் நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம் செயற்படும் நாடுகளில் சரவதேச சிறுவர் தின நிகழ்வுகளை யுனிசெப் நிறுவனம் கொண்டாடி வருகின்றது. யுனிசெப் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கைக்கான சர்வதேச சிறுவர் தின விழா இவ்வருடம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட கல்முனை கல்வி வலயத்தில் உள்ள மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் எதிர்வரும் 20.11.2013 ஆந் திகதி நடாத்துவதென உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட் கிழமை 11 ஆந் திகதி கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தலைமையில் யுனிசெப் இணைப்பாளர் எம்.எம்.நிபால் ,கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம், பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் ,திருக்கோயில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் உட்பட வலயக்கல்வி அலுவலகங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு மேற்படி விழாவை
நடாத்துவதற்கான சாத்தியவளங்கள் பற்றி ஆராய்ந்து மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள் அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை சமுகத்தினர் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
வெளிப்பிரதேசங்களில் இருந்து வருகை தரும் 1000 மாணவர்களோடு யுனிசெப் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மற்றும் யுனிசெப் வலய இணைப்பாளர்கள் ,கல்விப் புலத்தில் உள்ள மேலதிகாரிகள் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றய தினம் மழை பெய்தாலும் விளையாட்டு ,சித்திரக்கண்காட்சி மற்றும் போட்டிகள் என்பன கோலாகலமாக நடை பெறுவதற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்தி தருவதாக சம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் ஏ.ஆர்.எம்.தௌபீக் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் பாடசாலை சமுகத்தினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க உறுதியளித்துள்ளதாக சம்ஸ் மத்திய கல்லூரியின் பாடசாலை மேம்பாட்டுக்கான வலயக்கல்விப் பிரதி நிதி ஆசிரிய ஆலோசகர் ரீ.எல்.ஹபீபுள்ளா தெரிவித்தார்
Comments
Post a Comment