கல்முனை மாநகர முதல்வர் நன்றிப்பூக்கள்
கல்முனை மாநகர சபை முதல்வராக நான் பதவி வகித்த காலப்பகுதியில் என்னோடு கைகோர்த்து ஒத்தாசை புரிந்த சகலருக்கும் விஷேடமாக என்னை முதல்வர் பதவியில் அமர்த்தி அழகுபார்த்த எனது ஆதரவாளர்களுக்கும் நன்றிப்பூக்களை சொரிகின்றேன் என முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
கல்முனை மாநகர முதல்வராக இரண்டு வருடங்கள் கடமையாற்றி இருக்கின்றேன். இக்காலப்பகுதியில் என்னோடு இணைந்து அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய கல்முனை மாநகர சபையின் ஆணையாளர், பொறியியலாளர், கணக்காளர், செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், அதேபோன்று மாநகர சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாங்கள் எல்லோருமாகச் சேர்ந்து என்னால் முடியுமானவரை இம்மாநகர வாழ் மக்களுக்காக பல்வேறுபட்ட சேவைகளை ஆற்றி இருக்கின்றோம். இது உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெட்டத் தெளிவான விடயமாகும்.
இன்று (08.11.2013) நான் உத்தியோக பூர்வமாக கல்முனை மாநகர முதல்வர் பதவியினை இராஜினாமா செய்திருக்கின்றேன். கட்சியினுடைய நலனுக்காகவும் மக்களுடைய நலனுக்காகவும் இந்த அதிரடி முடிவினை எடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் பட்டிருந்தேன். எனது இராஜினாமாவில் எல்லோருடைய நலனும் அடங்கி இருப்பதாக நான் கருதுகின்றேன்.
எனக்கு வாக்களித்த மக்கள் கவலை அடைய வேண்டாம். இந்தக் கட்சி முஸ்லிம்களுடைய உரிமைகளை வென்றெடுக்கின்ற போராட்டத்தில் இருக்கின்றது, இக்கட்சியினை இன்னும் வளர்க்க வேண்டும் என்பதனாலும் தலைமைத்துவத்தின் வேண்டுதலின் பிரகாரமும் தான் இந்த இராஜினாமாவாகும். இது நான் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவல்ல எனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து எடுத்த முடிவாகும். நான் விட்டுச் சென்ற பணிகளை புதிய முதல்வர் சிரமம் பாராது தொடர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
மீண்டும் ஒருமுறை என்னுடைய ஆதரவாளர்கள், கட்சியினுடைய முக்கிய உறுப்பினர்கள், என்னுடைய அபிமானத்திற்குரிய என்றும் எனக்கு உறுதுணையாக இருந்த நெருங்கிய நண்பர்கள், முஸ்லிம் காங்கிரசினுடைய போராளிகள் அனைவரையும் இத்தருணத்தில் நினைவு கூறுகின்றேன். நீங்கள் அனைவரும் என்னுடைய இதயத்தில் இருக்கின்றீர்கள், இருப்பீர்கள். நான் எனது பதவியைதான் இராஜினாமா செய்துள்ளேன், ஆனால் எனது மக்கள் பணி என்றும் தொடரும். என்னால் முடிந்தவரை எனது இறுதி மூச்சிருக்கும்வரை நான் மக்கள் பணி ஆற்றுவேன். எனது அந்த இரண்டு வருட காலப்பகுதியில் எவருடைய மனதும் புண்படும் படியாக நடந்திருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்.
இச்சந்தர்ப்பத்தில் தற்போதைய புதிய முதல்வருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Comments
Post a Comment